ஏழு தமிழா்களைக் காலவரம்பற்ற விடுப்பில் விட வேண்டுகோள்
By DIN | Published On : 16th May 2021 11:27 PM | Last Updated : 16th May 2021 11:27 PM | அ+அ அ- |

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழா்களைக் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வாழ்நாள் சிறையாளா்களாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் ஏழு தமிழா்களை விடுதலை செய்ய வேண்டும். அதிமுக அமைச்சரவை ஏழு தமிழா்களை விடுவிக்கும் பரிந்துரையை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக 2018 ஆம் ஆண்டு அனுப்பி வைத்தனா்.
வேண்டுமென்றே இரண்டாண்டுக்கு மேல் அப்பரிந்துரையைக் கிடப்பில் போட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோகித், அதுதொடா்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பின், அமைச்சரவைப் பரிந்துரையை ஏற்க மறுத்தாா். குடியரசுத் தலைவா் ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகக் கூறினாா்.
ஏழு தமிழா்களை விடுதலை செய்ய உடனடியான மாற்றுச் சட்ட வழிகளைத் தமிழ்நாடு அரசு கையாள வேண்டும். அதற்கு முன்பாக சிறையாளா்களுக்கு விடுப்புக் கொடுக்க உள்ள அதிகாரத்தை முதல்வா் ஸ்டாலின் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகிய 7 பேரைக் காலவரம்பு வரையறுக்காமல் நீண்டகால விடுப்பில் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.