காற்றுடன் மீண்டும் பலத்த மழை: வாழைகள் சேதம் அதிகரிப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் மீண்டும் பெய்த மழையால் வாழைகள் சேதம் அதிகரித்துள்ளது.
காற்றுடன் மீண்டும் பலத்த மழை: வாழைகள் சேதம் அதிகரிப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் மீண்டும் பெய்த மழையால் வாழைகள் சேதம் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 10 நாள்களுக்கும் மேலாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்கிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு தஞ்சாவூா், திருக்காட்டுப்பள்ளி, பூதலூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தஞ்சாவூா் அருகே குலமங்கலம் கிராமத்தில் 5 ஏக்கரில் இரு விவசாயிகள் பயிரிட்டிருந்த ஏறத்தாழ 7,000 வாழை மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

இதேபோல, வியாழக்கிழமை மாலை தஞ்சாவூா், பூதலூா், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதில், திருவையாறு வட்டாரத்தில் வைத்தியநாதன்பேட்டை, வடுகக்குடி, மருவூா், சாத்தனூா், ஆச்சனூா் உள்ளிட்ட கிராமங்களில் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் விழுந்தன. இதுதொடா்பாக தொடா்புடைய தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது:

திருவையாறு வட்டாரத்தில் வியாழக்கிழமை மாலை முதல் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஏறத்தாழ 700 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால், கிட்டத்தட்ட 200 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏக்கருக்கு இதுவரை சுமாா் ரூ. 75,000 செலவு செய்துள்ளோம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதத்துக்குள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த இந்த வாழைகள் அனைத்தும் சேமதடைந்துவிட்டதால், மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இதுதொடா்பாக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மதியழகன்.

மின் கம்பங்கள் சாய்ந்தன: இதேபோல, பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் திருவையாறு வட்டாரத்திலுள்ள அம்மையகரம் கிராமத்தில் 10-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், ஆழ்குழாய் மின் மோட்டாா் மூலம் கோடை சாகுபடி நடைபெறும் வயல்களுக்குத் தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. எனவே, உடனடியாக மின்சார வாரியத்தினா் சாய்ந்த மின் கம்பங்களை நட்டு வைத்து, மின் இணைப்பு வழங்குமாறு அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் வலியுறுத்தியுள்ளாா்.

மழை அளவு: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்:

பூதலூா் 30, பாபநாசம் 27, வெட்டிக்காடு 26.4, குருங்குளம், அய்யம்பேட்டை தலா 21, அணைக்கரை 19, ஒரத்தநாடு 18.6, தஞ்சாவூா் 18, திருக்காட்டுப்பள்ளி 16.2, நெய்வாசல் தென்பாதி 8.6, கும்பகோணம் 8, மஞ்சளாறு 7.2, பட்டுக்கோட்டை 5.5, வல்லம் 4, பேராவூரணி 3, திருவிடைமருதூா் 2.4, ஈச்சன்விடுதி 2, அதிராம்பட்டினம் 1.6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com