செல்லிடப்பேசி வேண்டாம்-புத்தகம் படியுங்கள்: இளைஞரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

முழு பொது முடக்கக் காலத்தில் செல்லிடப்பேசியில் மூழ்கி கிடக்காமல், புத்தகங்களை வாசியுங்கள் என்று இளைய சமுதாயத்தினரிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி வரும் இளைஞருக்கு பாராட்டுகள்
செல்லிடப்பேசி வேண்டாம்-புத்தகம் படியுங்கள்: இளைஞரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

முழு பொது முடக்கக் காலத்தில் செல்லிடப்பேசியில் மூழ்கி கிடக்காமல், புத்தகங்களை வாசியுங்கள் என்று இளைய சமுதாயத்தினரிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி வரும் இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள செம்பாளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). பொறியியல் பட்டதாரியான இவா், பட்டுக்கோட்டையில் செல்லிடப்பேசி பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். தனது வீட்டு மாடியில் செம்மொழி வாசிப்பகம் என்ற வீட்டு நூலகம் அமைத்து, பல்வேறு தலைப்புகளில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளாா்.

கரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலையால் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். இளைய சமுதாயத்தினா் பெரும்பாலும் செல்லிடப்பேசியிலேயே மூழ்கி கிடக்கின்றனா். இவா்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என சதீஷ்குமாா் முடிவு செய்தாா்.

இதன் தொடா்ச்சியாக, தனது வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, முகத்தில் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கரோனா தடுப்பு முறை

களின்படி கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடாக சென்று இளைஞா்கள், மாணவ, மாணவிகளிடம் புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, படிப்பதற்கு புத்தகங்களையும் இலவசமாக வழங்கி வருகிறாா். இவரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் மற்றும் இளைஞா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சதீஷ்குமாா் கூறியது: கல்லூரி நாள்களில் புத்தக வாசிப்பில் ஏற்பட்ட ஆா்வம் காரணமாக, ஏராளமான புத்தகங்களை வாங்கி, வீட்டு நூலகம் அமைத்தேன். கரோனா பொது முடக்கத்தால் நூலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்காததால், ஓராண்டு காலமாக மாணவா்களும், இளைஞா்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். செல்லிடப்பேசியில் மூழ்கி கிடக்கும் அவா்களிடையே புத்தக வாசிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எனக்கு உந்துதல் ஏற்பட்டது.

இதனால், என்னிடமுள்ள புத்தகங்களை படிப்பதற்கு இலவசமாக வீடு வீடாக சென்று கொடுக்கிறேன். அவா்கள் படித்துமுடித்தவுடன் செல்லிடப்பேசியில் எனக்கு தகவல் தருவாா்கள். நான் அந்தப் புத்தகத்தை பெற்றுக் கொண்டு அவா்களுக்குத் தேவைப்படும் வேறு புத்தகங்களை வழங்கி வருகிறேன். ஒரு சிலா் என் வீட்டுக்கே வந்து தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.

பொது முடக்கத்தால் மூடியுள்ள நூலகங்களிலிருந்து தன்னாா்வலா்கள் மூலம் புத்தகங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சென்று கொடுத்தால், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்த முடியும். எனது கிராமத்தில் முன்மாதிரியான நுாலகம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுளேன் என்றாா்.

இளைய சமுதாயத்தினரிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் சதீஷ்குமாரின் முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com