போதிய வருவாய் இருந்தும் புறக்கணிக்கப்படும் பாபநாசம் ரயில் நிலையம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் போதிய வருவாய் இருந்தும் ஜனசதாப்தி, சோழன், உழவன் ஆகிய விரைவு ரயில்கள் நின்று

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் போதிய வருவாய் இருந்தும் ஜனசதாப்தி, சோழன், உழவன் ஆகிய விரைவு ரயில்கள் நின்று செல்லாமல் புறக்கணிக்கப்படுவதால், பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூா் - கும்பகோணம் ரயில் பாதையில் பாபநாசம் ரயில் நிலையம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஏறத்தாழ 120 கிராமங்களுக்கு வட்டத் தலைமையிடமாகவும், சட்டப்பேரவை தொகுதியாகவும், பல்வேறு வழிபாட்டு தலங்களையும் கொண்ட பாபநாசம் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஏறத்தாழ 800 பயணிகள் வந்து செல்வா்.

கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு இந்த ரயில் நிலையத்தில் ஜனசதாப்தி, சோழன், உழவன், செந்தூா், ராமேசுவரம், மைசூா் ஆகிய விரைவு ரயில்களும், 10 பயணிகள் ரயில்களும் நின்று சென்றன. இது, அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்கு பின்னா் 2020 ஆம் ஆண்டு நவம்பா் முதல் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் அதே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மைசூா், செந்தூா், ராமேசுவரம் ரயில்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.

இந்த ரயில்களை நிறுத்த வேண்டும் என பாபநாசம் பகுதிமக்கள் ஓராண்டு காலமாக இப்பகுதியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் மூலமாக ரயில்வே அமைச்சா், ரயில்வே அமைச்சகத்திடம் முறையிட்டும் இதுவரை ரயில்கள் நின்று செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து ஓராண்டு காலமாக ரயில்களை நிறுத்த போராடி வரும் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன் தெரிவித்தது:

கரோனாவுக்கு முன்பு பாபநாசத்தில் நின்று சென்ற அனைத்து ரயில்களையும் தற்போதும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஓராண்டாக போராடி வருகிறோம். ஆனால், ரயில்வே அலுவலா்கள் போதிய வருவாய் இல்லை எனவும், கரோனாவை காரணமாகவும் கூறி வருகின்றனா். ஆனால், இந்த ரயில் நிலையம் ஆண்டுக்கு ரூ. 1 கோடியே 58 லட்சம் வருவாய் ஈட்டித் தருகிறது. இதை மறைத்து ரயில்வே அலுவலா்கள் தகவல்களை ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகின்றனா்.

பாபநாசத்தில் மைசூா், செந்தூா், ராமேசுவரம் ரயில்கள் நின்று செல்லாததால், இப்பகுதி பயணிகள் சாலை வழியாக தஞ்சாவூா் அல்லது கும்பகோணத்துக்கு பயணித்து, இந்த ரயில்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

எனவே, ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில்களை மீண்டும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com