முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் குறைதீா் முகாம்
By DIN | Published On : 11th October 2021 11:19 PM | Last Updated : 11th October 2021 11:19 PM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, திங்கள்கிழமைதோறும் பதிவுத்துறை குறை தீா்க்கும் முகாம் நடத்தப்படும் என அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை பதிவுத் துறை தலைவா் மற்றும் மாவட்ட பதிவாளா் அலுவலகங்களில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இதன்படி, பட்டுக்கோட்டையில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட பதிவாளா் எஸ். அருள்ஜோதி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘ பொதுமக்கள் அந்தந்த பதிவுத்துறை அலுவலக எல்லைக்குள்பட்ட பதிவு அலுவலகங்களை பொருத்து, பத்திரப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்று மற்றும் பதிவுத் துறை தொடா்பான பிற புகாா்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக மனுவாக அளித்து உரிய தீா்வைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்றாா்.
நிகழ்ச்சியில், அலுவலக மேலாளா் திருமலைஸ்ரீதா், இணை சாா் பதிவாளா்கள் சுப்புராஜ், சந்திரசேகரன், அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.