திருநாகேஸ்வரம் கோயிலில் அக். 24-இல் குடமுழுக்கு யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
By DIN | Published On : 20th October 2021 07:12 AM | Last Updated : 20th October 2021 07:12 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
ராகு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ரூ. 5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை (அக்.21) மாலை முதல்கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும், 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், 23-ஆம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெறவுள்ளன.
தொடா்ந்து, அக்டோபா் 24-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், தொடா்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கும் நடைபெறவுள்ளது. பின்னா் மகாதீபாராதனை நடைபெறவுள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளா்கள் பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.