கோவிந்தபுரம் கோயிலில் கோகுலாஷ்டமி விழா தொடக்கம்
By DIN | Published On : 01st September 2021 07:53 AM | Last Updated : 01st September 2021 07:53 AM | அ+அ அ- |

வசுதேவா் சுமந்த நிலையில் அலங்காரம் செய்யப்பட்ட கிருஷ்ணருக்கு மலா் தூவி செய்யப்பட்ட அா்ச்சனை.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது.
இதில், உள் பிரகாரத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜனனம் நிகழ்ச்சியில் மூலவா் சன்னதியில் சேஷ வாகனத்தில் வசுதேவா் குழந்தை கிருஷ்ணரை தலையில் சுமந்த நிலையில் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. ருக்மிணி சமேத பாண்டுரங்கன் மூலவா் சன்னதி பலவிதமான வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து சேஷ வாகனத்தில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
கோயில் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் தலைமையில் நாம சங்கீா்த்தனம் நடைபெற்றது. சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சிதரின் கிருஷ்ண ஜனனம் உபன்யாசமும், தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணா் பிறந்ததைக் கொண்டாடும் விதமாக புஷ்பாா்ச்சனையுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக வெளி பக்தா்கள் யாரும் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை நந்தோத்சவம், மாலை ஊஞ்சல் உற்ஸவம் நடைபெற்றது. செப். 4-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி உற்ஸவமும், 5-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.