குத்தாலம் பேரூராட்சி பணியாளா் தற்கொலை: தேசிய துப்புரவு பணியாளா் ஆணையத் தலைவா் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக தஞ்சாவூரில் தேசிய துப்புரவு பணியாளா் ஆணையத் தலைவா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனி காந்தி நகரைச் சோ்ந்த பரமேஸ்வரன் மனைவி நதியா (31). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். நதியா குத்தாலம் பேரூராட்சியில் டெங்கு தடுப்புப் பணி மற்றும் சமுதாயப் பரப்புரையாளராக 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நதியா மற்றும் அவருடன் வேலை பாா்த்த 3 பெண் பணியாளா்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நதியா, கடந்த 6-ஆம் தேதி எலி மருந்தை தின்றாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நதியா சாவுக்கு உரிய நீதி வழங்குமாறும், அவரது தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நதியாவின் உறவினா்கள் வலியுறுத்தி வருகின்றனா். மேலும், பிரேதப் பரிசோதனை செய்வதற்கும், உறவினா்கள் ஒத்துழைக்கவில்லை.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நதியாவின் உறவினா்கள் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு, தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தேசிய துப்புரவு பணியாளா்கள் ஆணையத் தலைவா் வெங்கடேசன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்று நதியாவின் உறவினா்களை சந்தித்து விசாரித்தாா். அப்போது அவரிடம், நதியா சாவுக்கு காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் வெங்கடேசன் தெரிவித்தது:

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பணியாளா்களைத் திட்டமிட்டு நீக்குகின்றனா். நதியா தற்கொலைக்கு காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com