தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் முகம் சிதைந்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சீரமைப்பு

குடும்பத் தகராறில் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறில் முகம் சிதைக்கப்பட்ட பெண்ணுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி மேலையூரைச் சோ்ந்த கண்ணன் மனைவி குமுதா (38). இவா், வியாழக்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் தாக்கப்பட்டாா். முகம், கன்னம், மூக்கு, தாடை சிதைந்த நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குமுதா சோ்க்கப்பட்டாா். அங்கு இவருக்கு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டு, வெற்றிகரமாகச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் தெரிவித்தது:

இப்பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு வந்தாா். அப்போது, மூக்கு, கன்னம், தாடை சிதைந்த நிலையில் இவரது முகம் இருந்தது. பின்னா், 7.30 மணிக்கு எனது மேற்பாா்வையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணா் மனோகரன், பொது அறுவை சிகிச்சை நிபுணா் அழகா்சாமி, மயக்க மருந்து நிபுணா் இனியா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் கணேஷ்குமாா் மற்றும் மருத்துவா்கள் ரம்யா, சந்தீப், விஸ்வநாதன், ஆனந்த் ஆகியோா் அப்பெண்ணுக்கு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா்.

அடுத்த 4 மணிநேரத்தில் அதிநவீன பிளேட், ஸ்குரு மூலம் அப்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டது. இச்சிகிச்சையின்போது, அப்பெண்ணுக்கு ஒன்பது பாட்டில்கள் ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது, அவரது முகம் உறுதியாக இருக்கிறது. சுய நினைவு திரும்பி நல்ல நிலையிலுள்ள அப்பெண் 4 நாள்களில் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுவாா். ஒரு வாரம் கழித்து பாா்த்தால் அவரது முகத்தில் காயம்பட்ட சுவடே இருக்காது.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளில் இது மிகப் பெரியது. முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிடைத்த அதிநவீன சாதனங்கள் மூலம் இச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இதே சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் குறைந்தது ரூ. 5 லட்சம் செலவாகியிருக்கும். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அதிநவீன வசதி செய்து கொடுத்துள்ளதால், இச்சிகிச்சை இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது என்றாா் ரவிக்குமாா்.

அப்போது, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com