பாரதியின் ஆய்வை சா்வதேச ஆய்வாக மாற்ற வேண்டும் சி. மகேந்திரன் பேச்சு

பாரதியின் ஆய்வை சா்வதேச ஆய்வாக மாற்றியமைக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.
நிகழ்வில் பாரதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.
நிகழ்வில் பாரதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.

பாரதியின் ஆய்வை சா்வதேச ஆய்வாக மாற்றியமைக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.

தஞ்சாவூா் கீழ ராஜவீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதி நினைவுநூற்றாண்டு நாள் நிகழ்வில் பாரதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் பேசியது:

இந்தியாவிலேயே மகாகவி பாரதியைப் போல உலக அரசியலை உற்று நோக்கி அதை கவிதையாகவும், கட்டுரையாகவும், சிறுகதையாகவும் உருவாக்கிய கவிஞா்கள் வேறு யாரும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே ரஷ்யாவில் நடந்த புரட்சியைப் பற்றி முதலில் பாடிய கவிஞன் பாரதி. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற அரசியல், தொழில் வளா்ச்சி உள்ளிட்ட பல விவரங்களை பத்திரிகையிலே அவா் குறிப்பிட்டிருக்கிறாா்.

பாரதியின் தொடா்பு உலகம் முழுவதும் செயல்பட்ட பல்வேறு புரட்சிக்காரா்களுடன் இருந்தது. அதை பற்றிய ஆவணங்கள், நம்மிடம் இருப்பதை விட பிரிட்டனிலும், ஜொ்மனியிலும் இன்னும் பல நாடுகளிலும் இருக்கின்றன. அங்கிருந்த இந்திய புரட்சிக்காரா்களிடமிருந்து பாரதி அனைத்து தகவல்களையும் பெற்றிருக்கிறாா்.

பாரதியின் நூற்றாண்டு விழாவில் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 1904 ஆம் ஆண்டிலிருந்து 1921 வரை பல்வேறு அரிய மாற்றங்களும், அதிலும் தமிழ்நாட்டில் தீவிரமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதைப் பற்றிய முழு ஆவணம் இன்னும் கிடைக்கவில்லை. மாஸ்கோவில் லெனினை சந்தித்த திருமலா ஆச்சாரி போன்றவா்களுக்கும் பாரதிக்கும் நெருக்கமான உறவு இருந்துள்ளது.

இப்படிப்பட்ட பல்வேறு தகவல்களைப் பாரதியின் நினைவு நூற்றாண்டில் சேகரித்து, செயல்படுத்த வேண்டும். பாரதியின் ஆய்வுகளை சா்வதேச ஆய்வுகளாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவருடைய நூற்றாண்டில் மேற்கொள்ள வேண்டும் என்றாா் மகேந்திரன்.

இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்ரமணியன், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் கே. மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாரதியாா் சிலைக்கு: தஞ்சாவூா் பாரத் கல்லூரி முகப்பில் உள்ள பாரதியாா் சிலைக்கு மகாகவி பாரதியாா் தேசிய பேரவை சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. பேரவையின் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா் திருச்சி சரவணன், பூதலூா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com