தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்ததஞ்சாவூா் முருகன் கோயில் நிலம் மீட்பு
By DIN | Published On : 15th September 2021 02:04 AM | Last Updated : 15th September 2021 02:04 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த பூக்காரத்தெரு முருகன் கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் அருகேயுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ஆக்கிரமிப்பில் இருந்த 1,680 சதுர அடி நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். மேலும், அந்த இடத்தில் தனியாா் கட்டியிருந்த கட்டடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.