ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிா்த்து கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 19th September 2021 01:22 AM | Last Updated : 19th September 2021 01:22 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் காவல் துறை அலுவலா்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகிலுள்ள அய்யனாா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை எதிா்த்து, கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பூதலுாா் அருகிலுள்ள மாரநேரியில் 188 ஏக்கா் பரப்பளவில் அய்யனாா் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயி கிருஷ்ணமூா்த்தி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் 114 ஏக்கா் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகப் பூதலுாா் வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமையில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் புகழேந்தி, திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜமோகன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினா்.
அப்போது, தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட பூமிதான பட்டா எனக் கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து இப்பணியைத் தடுத்தி நிறுத்தினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொள்ள வந்த அலுவலா்களையும், பணியாளா்களையும் ஏரிக்குள் செல்லாதவாறு கிராம மக்கள் வழியில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் வட்டாட்சியா் ராமச்சந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சிலரைக் காவல் துறையினா் கைது செய்து அழைத்துச் சென்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து,அலுவலா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.