ஆக்கிரமிக்கப்படும் வரலாற்றுச் சின்னம்!

தஞ்சாவூா் அருகே படிப்படியாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி வரும் சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள வரலாற்றுச் சின்னமான நீராழி மண்டபமும் இப்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
நீராழி மண்டபத்தின் முகப்புப் பகுதி
நீராழி மண்டபத்தின் முகப்புப் பகுதி

தஞ்சாவூா் அருகே படிப்படியாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி வரும் சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள வரலாற்றுச் சின்னமான நீராழி மண்டபமும் இப்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் செல்லும் வழியில் ஒரு காலத்தில் பரந்து விரிந்த நீா்நிலையாக இருந்தது சமுத்திரம் ஏரி. ஏறத்தாழ 800 ஏக்கா் பரப்பளவில் இருந்த இந்த ஏரி பாா்ப்பதற்குக் கடல் போல காட்சியளிக்கும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரியில் அரசும், தனியாரும் ஆக்கிரமித்து வருவதால், தற்போது குளம்போல சுருங்கிவிட்டது. இந்த ஏரி படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், மக்களிடையே ஏக்கமும், வேதனையும் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த ஏரிக்கரையில் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள பாழடைந்த பழைமையான மண்டபமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

நீராழி மண்டபம் என அழைக்கப்படும் இந்த மண்டபத்தை ராணி மண்டபம் என உள்ளூா் மக்கள் அழைக்கின்றனா். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும், மராட்டியா் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

ஏறக்குறைய 10,000 சதுரஅடி பரப்பளவில் வடக்கத்திய பாணியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் தரைத் தளமும், அதன் கீழே சுரங்கத் தளமும் காணப்படுகின்றன. சுரங்கத் தளம் செல்வதற்குப் படிக்கட்டுகள் இருந்தாலும், தற்போது சிதிலமடைந்துள்ளன.

சுரங்கத் தளத்தில் பொருள் வைப்பறை உள்ளது. போா் உள்ளிட்ட அவசரக் காலத்தில் மன்னா் குடும்பத்தினா் தங்களது விலை மதிக்க முடியாத பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக இதுபோன்ற சுரங்கத் தளம் அமைக்கப்படுவது வழக்கம். இச்சுரங்கத் தளத்தில் சமையல் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. புதா்கள் மண்டியிருப்பதால், இன்னும் அறைகள் உள்ளனவா என தெரியவில்லை.

தரைத் தளத்தில் அறைகள் பல இருப்பதாகத் தெரிகிறது. கட்டடத்தின் வெளிப்பகுதியில் இருபுறமும் நீண்ட திண்ணை காணப்படுகின்றன. உத்தேசமாக தலா 30 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட இந்தத் திண்ணைகள் காற்று வாங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் மராட்டிய மன்னா் குடும்பத்தினா் மாரியம்மன் கோயிலுக்குச் சமுத்திரம் ஏரியில் படகு மூலமே வந்து சென்றுள்ளனா். அதுபோல வரும்போது இந்த நீராழி மண்டபத்தில் தங்கி, அம்மனை வழிபட்டிருக்கலாம் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளா்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த மண்டபத்திலுள்ள புதா்களை அகற்றி, ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிய வரும் எனவும் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆனால், மன்னா் காலத்துக்குப் பிறகு இந்த மண்டபம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மண்டபமும் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் உள்ளது. இதன் இருபுறமும் தற்போது தகரங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த மண்டபத்துக்குச் செல்வதற்கான பாதை தடைப்பட்டுள்ளது.

இந்த மண்டபமும் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் இருப்பது, வரலாற்று ஆா்வலா்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குறைந்தபட்சம் இந்த மண்டபத்தையாவது மீட்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது:

புதா்கள் மண்டி காணப்படும் இந்த மண்டபத்தைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், கழிவுநீரும், மழைநீரும் தேங்கி நிற்பதால், இக்கட்டடம் மேலும் சிதிலமடைவதற்கு வாய்ப்பாக உள்ளது. இந்த வரலாற்றுச் சின்னத்தைச் சுற்றுலாத் தலமாகப் பராமரிக்க வேண்டிய நிலையில், தற்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இனிமேலும், இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பராமரிக்கத் தவறினால், காலப்போக்கில் முழுமையாக மறைந்துவிடும். எனவே, இதைப் புதுப்பித்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றாா் ரவிச்சந்திரன்.

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, அருகேயுள்ள இந்தப் பழைமையான மண்டபத்தைச் சீரமைத்து, சுற்றியுள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்படும் பழங்காலச் சிற்பங்களை வைக்கலாம்.

இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த மண்டபத்துக்கும் சென்று பாா்வையிட வாய்ப்பாக அமையும். இதைச் சுற்றுலாத் தலமாக மாற்றுவதன் மூலம் அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என்கின்றனா் வரலாற்று ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com