உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: பி.ஆர். பாண்டியன்

மத்திய அரசு உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.
கூட்டத்தில் பேசுகிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.
கூட்டத்தில் பேசுகிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.

தஞ்சாவூர்: மத்திய அரசு உர விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.ஆர். பாண்டியன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கங்களின் அவசர கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை வேகமாகப் புகுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து வெளியில் தெரியாமல் சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., காம்ப்ளஸ் உரங்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக ரூ.1,200 என இருந்த ஒரு மூட்டை டி.ஏ.பி. விலை ரூ.1,350 ஆகவும், ரூ.1,375 என இருந்த காம்ப்ளக்ஸ் விலை ரூ.1,475 ஆகவும், ரூ.350 என இருந்த சூப்பர் பாஸ்பேட் விலை ரூ.450 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக விலையை உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக விலை உயர்வைக் கைவிட வேண்டும்.

இலங்கைக்கு உணவு உதவி...:

ஒரு புறம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்களை அரசுக் கொள்முதல் செய்யாமல் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெங்காயம் உற்பத்தி செய்த விவசாயிகள் ஒப்பாரி போராட்டம் நடத்துகின்றனர். தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் குப்பையில் கொட்டி போராடுகின்றனர். நெல் விவசாயிகளும் நிகழாண்டு பல்வேறு நடைமுறைக்கு சாத்தியமில்லாத குளறுபடிகளால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பேரிழப்பைச் சந்தித்தனர்.  

இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.7,500 கோடி நிதியுதவி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடுதான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்த வெங்காயம், தக்காளி, காய்கறிகள், நெல் தேங்கி அழிகின்ற நிலையில், இவற்றை மத்திய அரசு உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து, இலங்கைக்கு ரூ.7,500 கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தால், தமிழக விவசாயிகளும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவர். இலங்கைக்கும் நாம் உணவு கொடுத்ததாக நம்பிக்கை ஏற்படும் என்றார் பாண்டியன்.

அப்போது, சங்க மாநிலத் தலைவர் பழனியப்பன், துணைத் தலைவர் கிருஷ்ணமணி, மாவட்டத் தலைவர்கள் செந்தில், சுப்பையன், ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com