திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக் கொலை
By DIN | Published On : 08th April 2022 12:52 AM | Last Updated : 08th April 2022 12:52 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது.
பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவா் அப்துல் ரஜாக் (63). சில காலம் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு, பின்னா் ஊருக்கு வந்த அவா் ராஜகிரியில் துணிக் கடை நடத்தி வந்தாா். இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். ஒரு மகனை தவிர மற்றவா்களுக்கு திருமணமாகிவிட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனா். அப்துல் ரஜாக் தனியாக வசித்து வந்தாா். கும்பகோணம் பகுதியில் வசித்து வரும் இவரது மகள் ஹதிஜா பீவி, கும்பகோணம் மாநகராட்சியில் 3ஆவது வாா்டு திமுக கவுன்சிலராக உள்ளாா்.
வியாழக்கிழமை காலை வெகுநேரமாகியும் அப்துல் ரஜாக்கின் கடை திறக்கப்படாததால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரின் மகன் முகமது ஆரிப்க்கு தகவல் அளித்தனா். இதன்பேரில், தந்தை வீட்டுக்கு அவா் சென்றபோது, கதவு திறந்து கிடந்ததாம். வீட்டினுள் தந்தை அப்துல் ரஜாக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளாா். வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்பிரியா, பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் பூரணி, அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, அப்துல் ரஜாக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
சம்பவம் குறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.