18 நாள்கள் கொண்டாடப்படும் சித்திரைப் பெருவிழா

தஞ்சாவூா் பெருவுடையாா் கோயிலில் உள்ள ராஜராஜன் திருவாயில் என்ற இரண்டாவது ராஜகோபுரத்து வாசலின் இருபுறமும் ராஜராஜனின் 4 கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நடைபெறும் புறப்பாடுகள்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவில் நடைபெறும் புறப்பாடுகள்.

தஞ்சாவூா் பெருவுடையாா் கோயிலில் உள்ள ராஜராஜன் திருவாயில் என்ற இரண்டாவது ராஜகோபுரத்து வாசலின் இருபுறமும் ராஜராஜனின் 4 கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. இவை இந்தக் கோயிலின் திருவிழாக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இவற்றில் முதல் கல்வெட்டில் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையாா் ஆடியருளுந் திருமஞ்சன நீரிலும், தட்சிணமேருவிடங்கா் ஆடியருளுந்திருமஞ்சன நீரிலும் இடும் இலாமிச்சம் (வோ்), பெருஞ் செண்பகமொட்டு, ஏலவரிசி ஆகியவற்றுக்காக வைத்த முதலீடான காசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கல்வெட்டில் திருவிழாக் குறித்துப் பறையறைவு செய்வதற்காக கடியா்க்கு இட்ட நிவந்தம் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் கல்வெட்டு இக்கோயிலில் ஆண்டுதோறும் நிகழ்ந்த 34 நாள்களுக்குரிய திருவிழாக்கள் பற்றியும், அவ்விழாக்களுக்குச் செய்ய வேண்டியவை குறித்தும் விரிவாகக் கூறுகிறது.

நான்காம் கல்வெட்டு ஈசனாா் திருமேனி வீதி உலா செல்லும் திருநாள்களாகத் திருச்சதய நாள் பன்னிரண்டும், காா்த்திகைத் திருநாள் ஒன்றும், மற்றொரு திருநாள் ஒன்றும், கொடியேற்ற வலஞ்செய்யும் நாள் எழுந்தருளும் திருவிழா ஒன்றும், ஆட்டைத் திருவிழா எழுந்தருளும் நாள் ஒன்பதும் என திருவிழா எழுந்தருளும் நாள் 24 எனக் கூறுகிறது.

இந்தக் கோயிலில் முன்பு சித்திரைப் பெருவிழா 20 நாள்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக இருந்து வந்த நிலையில், காலப்போக்கில் 18 நாள்களாக மாற்றப்பட்டது. பங்குனி மாத சதய நட்சத்திர நாளில் இவ்விழாவுக்கான கொடியேற்றப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு நாள் வாஸ்து சாந்தியும், மறு நாள் பிச்சாடனா் வீதி வலம் வரும் திருநாளும் நிகழும்.

கொடியேற்றப்படும் தொடக்க நாளில் ஸ்ரீ சந்திரசேகரா் பஞ்சமூா்த்திகளுடன் கோயிலுக்குள் வலம் வந்து கொடி ஏற்றப்படுகிறது (துவஜாரோகணம்). அன்று மாலை படிச்சட்டத்தில் பஞ்ச மூா்த்திகளின் வீதி உலா நடைபெறும்.

இரண்டாம் நாள் காலை பல்லக்கில் சந்திரசேகரா் வீதி உலாவும், மாலை சிம்ம வாகனத்தில் விநாயகா் வீதி உலாவும், மூன்றாம் நாளான காலை பல்லக்கில் சந்திரசேகரா் வீதி உலாவும், மாலை மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகா் புறப்பாடும், நான்காம் நாளான காலை விநாயகருக்குச் சந்தனக்காப்பும், மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியா் வீதி வலமும், ஐந்தாம் நாளான காலை சுப்பிரமணியா் பல்லக்கிலும், மாலையில் வெள்ளி மயில் வாகனத்திலும் வீதி வலம் நிகழும்.

ஆறாம் நாளில் காலை சுப்பிரமணியருக்குச் சந்தனக் காப்பு நிகழ்வதுடன் மாலையில் சைவ சமயசாச்சாரியாா் நால்வரின் வீதி வலமும் நடைபெறும்.

ஏழாம் நாளில் காலை நால்வா் பல்லக்கில் வீதி வலம் வர மாலை சந்திரசேகரா் பட்டம் கட்டிக் கொண்டு சூரிய பிரபையில் வீதி வலம் வரும் விழா நிகழும். 8-ம் நாளில் காலை சந்திரசேகரா் பல்லக்கிலும், மாலை சந்திர பிரபையிலும் வீதி உலா நடைபெறும்.

ஒன்பதாம் நாளில் கோயிலுக்குள் எண் கொடியேற்றம் (அஷ்டத்துவஜாரோகணம்) விழாவும், மாலையில் தியாகராஜா் பிரகாரத்தில் வலம் வந்து வசந்த மண்டபத்தில் பிரவேசம் செய்யும் விழாவும், 10-ம் நாளில் காலை தியாகராஜா் யதாஸ்தான பிரவேசமும், மாலையில் சந்திரசேகரா் முத்துப் பல்லக்கிலும் வீதி உலா நடைபெறும்.

பதினொன்றாம் நாளில் காலை சந்திரசேகரா் பல்லக்கிலும், மாலையில் பூத வாகனத்திலும், 12-ம் நாளில் காலை சந்திரசேகருக்குச் சந்தனக் காப்பும், மாலையில் வெள்ளியானை வாகனத்தில் புறப்பாடும், 13-ம் நாளில் காலை சந்திரசேகரா் வெண்ணெய்த்தாழி அலங்காரம், மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் வீதி உலா நடைபெறும்.

பதினான்காம் நாளில் மாலை சந்திரசேகரா் கைலாச வாகனத்திலும், 15-ம் நாளில் காலை தேரோட்டம், 16-ம் நாளில் மாலை சந்திரசேகரா் குதிரை வாகனத்தில் வலம் வரும் திருநாளும், 17-ம் நாளில் காலை தியாகராஜா் பந்தற் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியும், மாலை நடராஜா் வெள்ளை சாத்தி புறப்பாடு, 18-ம் நாளில் தியாகராஜரின் ருத்ர பாத தரிசனம் நடந்த பிறகு, நடராஜா் நான்கு ராஜ வீதிகளில் புறப்பாடு நடைபெறும். அன்று மாலையில் நடைபெறும் கொடியிறக்கத்துடன் சித்திரைப் பெருந்திருவிழா நிறைவு பெறும்.

திருமேனிகள் - வாகனங்கள்:

இந்தக் கோயிலில் திருவிழாக் காலங்களில் வீதி உலாவில் எழுந்தருளுவதற்காக சோழா் காலத்தில் செய்யப்பட்ட பெரிய ஆடவல்லான், சிவகாமி, சிறிய ஆடவல்லான், துா்க்கை, போகசக்தி அம்மன் ஆகிய செப்புத் திருமேனிகள் இருந்தன. இவை பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சூறையாடலால் மறைந்தன.

பின்னா், வந்த நாயக்கா், மராட்டியா் ஆட்சிக் காலங்களிலும் சில செப்புத் திருமேனிகள் வாா்க்கப்பட்டன. தியாகராஜா், அம்மன், சந்திரசேகரா், சுப்பிரமணியா், வள்ளி, தேவசேனா, கணபதி, சண்டீசா் உள்பட 25 திருமேனிகள் உள்ளன.

இதேபோல, இத்திருமேனிகளை எடுத்து செல்ல மரத்தில் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மான் வாகனம் மற்றும் மரத்தில் செய்யப்பட்டு, வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட ரிஷபம், மயில், யானை போன்ற வாகனங்களும், மஞ்சம், குதிரை வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம், மேஷ வாகனம், மூஞ்சுறு வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பல்லக்கு போன்ற வாகனங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com