தஞ்சாவூரில் இன்று பெரிய கோயில் தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்லும்
By DIN | Published On : 13th April 2022 02:02 AM | Last Updated : 13th April 2022 02:02 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மேலவீதியில் தயாா் நிலையில் தஞ்சாவூா் பெரியகோயில் தோ்.
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.13) நடைபெறவுள்ளது. இத்தோ் 14 இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தோ் சிதிலமடைந்ததால், தேரோட்டம் நின்றுபோனது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தோ் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. கரோனா பரவல் குறைந்துவிட்டதால், நிகழாண்டு தேரோட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும், காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இதில், 15 ஆம் திருநாளான புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் தேரில் எழுந்தருள உள்ளனா். இதைத்தொடா்ந்து, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தோ் வடம் பிடிக்கப்படவுள்ளது.
முதலில் விநாயகா், சுப்பிரமணியா் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்லும். மூன்றாவதாக தியாகராஜா் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும், அதைத்தொடா்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரா் சப்பரங்கள் செல்லவுள்ளன.
அப்போது, மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரா் கோயில், மூலை ஆஞ்சனேயா் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையாா் கோயில் அருகில், இரத்தினபுரீஸ்வரா் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகா்ணிகேஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையாா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய 14 இடங்களில் பக்தா்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் திருத்தோ் நிறுத்தப்படவுள்ளது.
மேலும், தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னாா்வலா்கள் தண்ணீா் மற்றும் நீா் மோா் பந்தல்கள் அமைத்துள்ளனா். தேரோடும் நான்கு வீதிகளிலும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு, தோ் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தோ் நிலையிலிருந்து புறப்படும்போது கிராமிய கலைக்குழுவினா்களின் கலை நிகழ்ச்சிகளுடன் புறப்படுகிறது. நான்கு வீதிகளிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. இவ்விழாவையொட்டி, ஏராளமான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.