மின் வெட்டுக்கு மத்திய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கும்பகோணம்: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக்கான புதிய அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அடிக்கல்லை நாட்டிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை தவிர்க்க வேண்டிய கடமை நம் அரசுக்கு இருக்கிறது. மின்வெட்டு குறித்து மாநில அரசுத் தெளிவாகக் கூறியிருக்கிறது. நிலக்கரியை வழங்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அங்கிருந்து நிலக்கரி வந்தால்தான் அனல் மின் நிலையம் வேலை செய்யும். மாநில அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியாது. இத்துறையில் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், 7, 8 மாநிலங்களில் இந்த நிலைமை நீடிக்கிறது. நிலக்கரி உற்பத்திக்கு ஏற்பாடு செய்யுமாறும், நிலக்கரி கையிருப்பை அதிகப்படுத்துமாறும் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், மத்திய அரசுக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே, இப்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மிக முக்கிய காரணம் மத்திய தொகுப்பிலிருந்து நிலக்கரி வழங்காததுதான். இது தொடர்பாக தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால், விரைவில் சரியாகும்.

அண்மையில் தில்லி ஜஹாங்கீர்புரியில் குடிசைகளை அகற்றுவதற்காக புல்டோசர்களை கொண்டு வந்து மிக மோசமான சீரழிவை ஏற்படுத்தியிருப்பதை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் ஒரு சிரமத்தை ஏற்படுத்தி, மக்களுக்குத் துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாஜக ஆட்சியாளர்கள் ஜஹாங்கீர்புரியில் அத்தவறைச் செய்துள்ளனர். 

அன்றைக்கு ஒளரங்கசீப் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டார். இந்துக்கள் மீது வரி விதித்தார். பிற சமயத்தினரை துன்புறுத்தினார். அதே செயல்களைத்தான் இன்றைய ஆட்சியாளர்களும் செய்கின்றனர் என்றார் அழகிரி.

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் செல்லும் கே.வி. தங்கபாலு தலைமையிலான இந்திய சுதந்திரத்தின் 75-வது பொன் விழா உப்பு சத்தியாகிரக நினைவு நடைபயணத்தை கும்பகோணத்திலிருந்து அழகிரி தொடக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com