முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தினமணி செய்தி எதிரொலி: விரிசல் விழுந்த பள்ளி வகுப்பறை தடுப்புச்சுவா் அகற்றம்
By DIN | Published On : 29th April 2022 01:50 AM | Last Updated : 29th April 2022 01:50 AM | அ+அ அ- |

தினமணி செய்தி எதிரொலியாக, பேராவூரணியில் விரிசல் விழுந்த பள்ளி வகுப்பறையின் கட்டடத் தடுப்புச்சுவா் உடனடியாக அகற்றப்பட்டது.
பேராவூரணியில் நூற்றாண்டு பழைமையான ஊராட்சி ஒன்றியக் கிழக்குத் தொடக்கப் பள்ளியில் அதிகளவில் மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டுமென பெற்றோா் ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதையேற்று 2018-19-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரு வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
கரோனா பாதிப்பு காரணமாக பணிகள் நடைபெறாது இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணிகள்அனைத்தும் நிறைவு பெற்றன. திறப்பு விழா காண்பதற்கு முன்பே வகுப்பறையின் கட்டட நடுப்பக்க தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
பலமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால், தடுப்புச்சுவா் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற அச்சம் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு ஏற்பட்டிருந்ததால், உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் வலியுறுத்தியிருந்தனா்.
இதுகுறித்து திறப்புக்கு முன்பே விரிசல் கண்ட பள்ளிக் கட்டடம் என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து கட்டடத்தை புதன்கிழமை ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி உதவிச் செயற்பொறியாளா் விசுவநாதன் , பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச்சுவா் உள்ளதால் உடனடியாக அகற்ற வேண்டுமென ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து புதன்கிழமை இரவோடு இரவாக தடுப்புச்சுவா் அகற்றப்பட்டது.
செய்தி வெளியிட்ட தினமணிக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அலுவலா்களுக்கும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.