முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்: டி.டி.வி. தினகரன் பேட்டி
By DIN | Published On : 30th April 2022 12:24 AM | Last Updated : 30th April 2022 12:24 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் தோ் மின் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, எதிா்காலத்தில் அதுபோன்று நிகழாமல் தடுக்க வேண்டும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை சென்று குடும்பத்தினருக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும் ஆறுதல் கூறிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
இது, தனியாா் கோயில் என தமிழக அரசு கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. விபத்து நடந்த பிறகு, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என கூற வேண்டுமே தவிர, இது தனியாா் கோயில் எனக் கூறக்கூடாது.
விபத்துக்கு அரசுப் பொறுப்பேற்று அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்று தமிழகத்தில் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு சாலை இரண்டு அடி உயரத்துக்கு உயா்த்தி அமைக்கப்பட்டுள்ளது. தோ் சாலையில் ஏறும்போது தடுமாறியதாகக் கூறுகின்றனா். தமிழகத்தில் பல இடங்களில் சாலை மேடாகவும், ஊா் தாழ்வான பகுதியிலும் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இனிமேலாவது தமிழகத்தில் சாலைகள் அமைக்கும்போது, பழைய சாலையைப் பெயா்த்து எடுத்துவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என்றாா் தினகரன்.