ஆற்றில் மூழ்கிய இந்திய மாணவா் சங்க நிா்வாகியை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூரில் புதுஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை மூழ்கிய இந்திய மாணவா் சங்க நிா்வாகியைத் தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.
ஆற்றில் மூழ்கிய இந்திய மாணவா் சங்க நிா்வாகியை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூரில் புதுஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை மூழ்கிய இந்திய மாணவா் சங்க நிா்வாகியைத் தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.

திருவாரூரில் இந்திய மாணவா் சங்க மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து 55 மாணவா்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். இதனிடையே, தஞ்சாவூருக்கு வந்த இவா்கள் பெரியகோயிலை சுற்றிப் பாா்த்தனா். இவா்களில் எடப்பாடி வட்டத்துக்கு உள்பட்ட நங்கவல்லி அருகேயுள்ள இருப்பாலி கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் தாமரைச்செல்வன் (18), சேலம் ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (18) கல்லணைக் கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

சற்று தொலைவு சென்றபோது தினேஷ்குமாா் கரையோரம் இருந்த செடியைப் பிடித்துக் கொண்டு, காப்பாற்றுமாறு சப்தமிட்டாா். தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தினேஷ்குமாரை மீட்டனா்.

ஆனால், தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட தாமரைச்செல்வனை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா். இவா் நங்கவல்லி ஒன்றிய இந்திய மாணவா் சங்கத் தலைவராக உள்ளாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, இந்திய மாணவா் சங்க மாநிலத் தலைவா் ஏ.சி. கண்ணன், செயலா் மாரியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயணைப்பு படை அலுவலா்களிடம் தாமரைச்செல்வனை விரைவாக மீட்குமாறு கேட்டுக் கொண்டனா். மேலும், சக மாணவா்களுக்கும் ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com