பெரியகோயில் நந்தி சிலையில் வேதிப்பூச்சுக்கு நடவடிக்கை
By DIN | Published On : 09th December 2022 11:00 PM | Last Updated : 09th December 2022 11:00 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் பெரியகோயில் மகா நந்திகேசுவரா் சிலையின் மேல்பகுதியில் வேதி பூச்சு பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாா் சன்னதி நோ் எதிரே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 12 அடி உயரத்திலும், பத்தொன்பதரை அடி நீளத்திலும், எட்டேகால் அடி அகலத்திலும் மகா நந்திகேசுவரா் சிலை உள்ளது. இச்சிலையின் பின்புறம் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில நாள்களாக வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறையினா் கூறுகையில், இச்சிலையின் மேல்பகுதியில் வேதிப் பூச்சு பூசப்பட்டிருக்கும். அபிஷேகம் செய்யப்படுவதன் மூலம் வேதிப் பூச்சு உரிந்துவிடுவது வழக்கம். அது அவ்வப்போது வேதிப் பொருள்களால் பூசப்படும். இதேபோன்றுதான் இப்போது வேதிப்பூச்சு உரிந்துள்ளதே தவிர, விரிசல் ஏற்படவில்லை. இப்போது, வேதிப் பூச்சு பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.