முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் 125-ஆம் ஆண்டு விஜய விழா
By DIN | Published On : 07th February 2022 12:29 AM | Last Updated : 07th February 2022 12:29 AM | அ+அ அ- |

விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிய தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ்.
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜயம் செய்த 125-ஆம் ஆண்டையொட்டி, விஜய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் வழிகாட்டலுடன், கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையிலுள்ள ராமகிருஷ்ணா் விவேகானந்தா் அறக்கட்டளை கோயிலில் சிறப்புச் சொற்பொழிவு, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
மேலும், நகரிலுள்ள 13 பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவ, மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தா் விஜயம் சிறப்பு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள விவேகானந்தா் வருகை நினைவுப் பலகை மற்றும் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, வழிபாடு செய்யப்பட்டது. மடத்துத் தெருவில் தனியாா் நிறுவனத்தில் பூஜைக்கான சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு தொடங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து சுவாமி விவேகானந்தா் 125 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய கும்பகோணம் போட்டா் டவுன் ஹாலில் அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னா், ஓவியப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்குத் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ் ஆகியோா் பரிசு வழங்கினா்.
இதில், சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை வருங்கால தலைமுறையினா் அறிந்து வாழ்க்கையில் பின்பற்றும் வகையில், கும்பகோணத்தில் அவா் விஜயம் செய்ததைப் போற்றும் விதமாக போா்டா் டவுன் ஹாலில் அவரது திருவுருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைமுறைக்குப் பிறகு அரசின் வழிகாட்டலுடன் நடத்தப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் கிளப் செயலா் விஜயகுமாா், சோழ மண்டல ஸ்ரீ விவேகானந்தா் சேவா சங்கத் தலைவா் பாஸ்கா், பொருளாளா் பாரதி மோகன், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த அறக்கட்டளைச் செயலா் வெங்கட்ராமன், கண்ணன், கும்பகோணம் தென் பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை செயலா்கள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, நிா்வாகக் குழு உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.