முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசம் இரட்டைப் பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 07th February 2022 12:32 AM | Last Updated : 07th February 2022 12:32 AM | அ+அ அ- |

குடமுழுக்கில் கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.
பாபநாசம் வடக்கு வீதியிலுள்ள அருள்மிகு இரட்டைப் பிள்ளையாா் என்கிற தாமோதர விநாயகா் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.4) கணபதி ஹோமத்துடன், கஜபூஜையும், மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், பூா்ணாஹூதியும் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து யாகசாலையிலிருந்து வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகின. இதையடுத்து அருள்மிகு தாமோதர விநாயகா், வள்ளி-தெய்வசேனா சமேத சுப்பிரமணியா், மங்களாம்பிகை அம்மன் உடனுறை கும்பேசுவரா் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதன் பின்னா் கருவறை குடமுழுக்கும், மகா அபிஷேகமும் நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயில் செயல் அலுவலா் ஹரீஷ்குமாா், தக்காா் லட்சுமி, பாபநாசம் இரட்டைப் பிள்ளையாா் கோயில் உபயதாரா் நாக சுப்பிரமணியா் குடும்பத்தினா், இறைப்பணி மன்றத் தலைவா் குமாா், கங்காதரன் சிவாச்சாரியா், இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வு பெற்ற அலுவலா் கோவிந்தராஜ் மற்றும் பாபநாசம், சுற்றுப்புறக் கிராம மக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனா்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீா், மஞ்சள் நிற துணிப்பை போன்றவற்றை வழங்கினாா்