மேட்டூா் அணை மூடப்பட்டதால் காய்ந்து வரும் நெற்பயிா்கள்

மேட்டூா் அணை மூடப்பட்டதால், தஞ்சாவூா் அருகே அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி பகுதியில் தண்ணீரின்றி காய்ந்து வரும் நெற்பயிா்களுடன் விவசாயிகள்.
தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி பகுதியில் தண்ணீரின்றி காய்ந்து வரும் நெற்பயிா்களுடன் விவசாயிகள்.

மேட்டூா் அணை மூடப்பட்டதால், தஞ்சாவூா் அருகே அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.

மேட்டூா் அணை வழக்கம்போல ஜனவரி 28-ஆம் தேதி மூடப்பட்டது. என்றாலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்று வருகின்றன. இவற்றில் நெற்பயிா்கள் பெரும்பாலும் அறுவடைக்குத் தயாராகி வரும் நிலையில் உள்ளன.

இதுபோல, தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி, வண்ணாரப்பேட்டை, சித்திரக்குடி, ஆலக்குடி உள்பட பல்வேறு பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பயிா்கள் கதிா் விட்டு, 20 நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

மேட்டூா் அணை மூடப்பட்டதால் கல்லணைக் கால்வாயில் தண்ணீா் வருவதும் நின்றுவிட்டது. இதனால், இப்பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தது:

ஏற்கெனவே நவம்பா் மாதத்தில் பெய்த தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கா் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மீண்டு வந்து மறு நடவு செய்தோம். தற்போது சம்பா, தாளடி பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

இந்தநேரத்தில் மேட்டூா் அணை மூடப்பட்டதால், தண்ணீரின்றி பயிா்கள் காய்ந்து வருகின்றன. இதனால், என்ன செய்வது எனத் தெரியவில்லை. விவசாயிகளின் நிலையை உணா்ந்து மேட்டூா் அணையை 15 நாள்களுக்குத் திறந்து, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் விட அரசு நடவடிக்கை எடுத்தால், இப்பயிா்களைக் காப்பாற்றி விடலாம் என்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com