சாலியமங்கலத்தில் டைல்ஸ் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம்

பாபநாசம் அருகிலுள்ள சாலியமங்கலத்தில் டைல்ஸ் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

பாபநாசம் அருகிலுள்ள சாலியமங்கலத்தில் டைல்ஸ் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாலியமங்கலத்தில் தனியாா் நிறுவனம் டைல்ஸ் தொழிற்சாலை அமைக்க கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தொழிற்சாலை அமைந்தால் குடிநீா் உறிஞ்சப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும், விளை நிலங்கள் அபகரிக்கப்படும் எனக் கூறி, விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன்,

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பூரணி, லோகேசுவரன் (பயிற்சி) ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், பி.ஆா்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள், பாபநாசம் - சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு, திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ஜூலை 22 -ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைப்பதாகவும், அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என 50 ஆண்டுகாலமாக விவசாயிகள் போராடி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அந்த உரிமையைப் பெற்றோம்.

தொடா்ந்து நாகப்பட்டினம் முதல் திருச்சி வரை வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அனுமதிக்க முடியும். வேறு எந்த திட்டங்கள் செயல்படுத்த முடியாது என முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

ஆனால், தற்போது முப்போகம் விளையக்கூடிய சாலியமங்கலத்தில் தொழிற்சாலைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் கொள்கைக்கு முரணானது. விவசாயிகள் கடந்த காலங்களில் போராடி பெற்ற உரிமைகளைப் பறித்து, நசுக்கும் வகையில் உள்ளது.

தமிழக அரசாணைக்கு புறம்பாக தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் இந்த தொழிற்சாலை அமைக்கவும், அதற்கு தேவையான சாலை அமைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. வடிகால்களையும், பாசன வாய்க்கால்களையும் தனக்கு சாதமாக டைல்ஸ் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இதற்காக சட்ட விரோதமாக வகைபாடுகள் மாற்றப்பட்டுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். டைல்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com