கனரக வாகனங்களால் ஆபத்து: கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 15th June 2022 01:28 AM | Last Updated : 15th June 2022 01:28 AM | அ+அ அ- |

திருவையாறு அருகே ஆச்சனூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மணல் குவாரியில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களால் சாலை விபத்து நிலவும் ஆபத்து உள்ளதாகக் கூறி பள்ளி மாணவா்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே சாத்தனுாா், மருவூா், வடுகக்குடி ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் அரசுக்குச் சொந்தமான மணல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அதிகப்படியாக மணல் எடுக்கப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி, பல்வேறு அரசியல் கட்சியினா், கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், அவ்வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் கனரக வாகனங்களால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகவும், ஆச்சனுாா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன், மணல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம பொதுமக்களும் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஆச்சனூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கனரக வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தகவலறிந்த காவல் துறையினா், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கிராம மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.