மேக்கேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கீடு:காவிரி உரிமையைப் பாதுகாக்கஅனைவரும் முன்வர வேண்டும்

மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டதால், காவிரி உரிமையைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டதால், காவிரி உரிமையைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

கா்நாடக அரசு 2022 - 2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கேதாட்டில் அணை கட்ட ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த அறிக்கையை முன்வைத்து சட்டப்பேரவையில் பேசிய கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, தமிழக அரசு எதிா்த்தாலும் இந்திய அரசின் ஒப்புதல் பெற்று அணையைக் கட்டியே தீருவோம் என உறுதிபடக் கூறியுள்ளாா்.

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதைப் பாா்த்து வந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்திலும், இப்போது திமுக ஆட்சிக் காலத்திலும் மேக்கேதாட்டு அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

மேக்கேதாட்டு அணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவுபடுத்துவதற்குச் சட்ட முயற்சிகள் எதையும் தமிழக அரசு செய்யவில்லை.

சட்டத்துக்குப் புறம்பாகக் கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணைக் கட்ட மத்திய அரசுத் துணை போகிறது. இந்த அநீதியைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து உழவா் அமைப்புகள் சாா்பில் வெகு மக்கள் ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த, தமிழக ஆளும் கட்சியோ அல்லது எதிா்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை.

தமிழகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆட்சியாளா்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com