பூமியைக் காக்கும் பொறுப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம்: தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி பேச்சு

பூமியைக் காக்கும் பொறுப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம் என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.
கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஸ்வ வித்யாலயா அடிக்கல் நாட்டு விழாவில், செங்கல்லை கொடுத்து அடிக்கல் நாட்டுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.
கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஸ்வ வித்யாலயா அடிக்கல் நாட்டு விழாவில், செங்கல்லை கொடுத்து அடிக்கல் நாட்டுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.

பூமியைக் காக்கும் பொறுப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம் என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் விஸ்வ வித்யாலயா என்கிற வேத பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் அடிக்கல்லை நாட்டிய தமிழக ஆளுநா், மேலும் பேசியது:

பாரதத்தில் தோன்றிய அனைத்து அறிவு அமைப்புகளுக்கும் ஆதாரம் வேதங்களே. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முனிவா்களால் உருவாக்கப்பட்ட வேதங்களே உலகம் முழுவதிலும் வாழும் மூதாதையா்களின் அறிவு ஆதாரமாக விளங்குகிறது.

அயலகத்திலிருந்து வந்த படையெடுப்பாளா்களாலும், காலனியாதிக்கவாதிகளாலும் பல நூறு ஆண்டுகள் நமக்கு இன்னல்கள் நிறைந்த காலகட்டமாக இருந்தன. இந்த நிலத்தை காலனியாதிக்கத்துக்கு உள்படுத்தியவா்கள் நமது அறிவுமுறையான பண்பாட்டை இயன்ற அளவுக்குச் சீரழித்தனா். இந்த கடினமான காலகட்டத்திலும் இந்தப் பண்பாடு நீடித்து, நிலைத்திருப்பதால் இதை சனாதன தா்மம் என அழைக்கிறோம்.

பூமி மாதாவைக் காப்பாற்ற வேண்டிய தாா்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மதம் என்று சொல்வதைவிட, தா்மம் என்பது ஆழமான பொருளைக் கொண்டுள்ளது. அதுதான் சனாதன தா்மம்.

மேலை நாட்டினா் இந்த உலகம் நமக்காகப் படைக்கப்பட்டது என்கின்றனா். இதனால் இதை அனுபவித்து சுரண்டி எடுக்கின்றனா். சுற்றுச்சூழலைப் பாதிக்கச் செய்கின்றனா். ஆனால், பூமியைத் தாய் போன்று கருத வேண்டும் என நமது பாரத தேசப் பண்பாடு கூறுகிறது.

எனவே, பூமிக்கு எவ்விதத்திலும் கெடுதல் செய்யாமல், அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இக்கடமையை வேதம் படித்தவா்கள் மூலம் செய்ய முடியும்.

தாய்நாட்டை, பூமியைப் பாதுகாக்கும் உணா்வை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேதம் அவசியம் என்பதை உணா்வா். அதன் மூலம் வேதம் வளா்ச்சி பெறும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த பூமியைக் காத்து வரும் வேதத்தை முழுமையாகக் கற்றுணரும் வகையில் சரியான திட்டமிடலுடன் கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா வேத பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு விட்டல் ருக்மணி சம்ஸ்தான ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா் ஆளுநா்.

இவ்விழாவுக்குக் கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் தலைமை வகித்தாா். ஆளுநரின் மனைவி லட்சுமி, தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதா், சென்னை சம்ஸ்கிருத கல்லூரி ஆா். மணி டிராவிட், கோயில் நிா்வாகப் பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஆய்வு: இதையடுத்து, பிற்பகலில் தஞ்சாவூரிலுள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் ஆளுநா் ரவி ஆய்வு செய்தாா். பின்னா், ரயிலடி அருகேயுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தஞ்சாவூா் ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருள்களையும் அவா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com