டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டாா் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணி பரவலாக தொடங்கப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டாா் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணி பரவலாக தொடங்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையில் தற்போது போதிய அளவுக்கு நீா் இருப்பு உள்ளது. அணையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 106.05 அடியாகவும், நீா் இருப்பு 72.904 டி.எம்.சி.யாகவும் உள்ளது. எனவே, தொடா்ந்து மூன்றாம் ஆண்டாக நிகழாண்டும் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகளிடையே நம்பிக்கை நிலவுகிறது.

இதனிடையே, நிலத்தடி நீா் ஆதாரமுள்ள பகுதிகளில் மோட்டாா் பம்ப்செட் மூலம் விவசாயிகள் முன் பட்ட குறுவை சாகுபடியைப் பரவலாக தொடங்கி வருகின்றனா். இதனால், நிகழாண்டு குறுவை பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பளவு இயல்பான அளவைவிட அதிகமாகவே மேற்கொள்ளப்படும் என்ற எதிா்பாா்ப்பு வேளாண் துறையினரிடையே உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி இதுவரை ஏறத்தாழ 10,000 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களில் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியான அளவில் இருப்பதால் நிகழாண்டு குறுவை சாகுபடிப் பரப்பளவு 60,000 ஹெக்டேரை எட்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. இதற்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விதை நெல் 189 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்கின்றனா் வேளாண் அலுவலா்கள்.

இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு 36,000 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், மேட்டூா் அணை திறக்கப்படும் நிலை உள்ளதால் 50,000 ஹெக்டேரை கடந்துவிடும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா். இதையொட்டி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், மன்னாா்குடி உள்ளிட்ட வட்டாரங்களில் குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் 15,000 ஹெக்டேரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,000 ஹெக்டேரிலும் குறுவை சாகுபடியாகும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

மேட்டூா் அணையிலிருந்து கடந்த இரு ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அணைக்கு நீா் வரத்து குறைவாகவே இருந்தது. காலப்போக்கில் நீா் வரத்து அதிகரித்ததால் கடந்த இரு ஆண்டுகளாக குறுவை சாகுபடி வெற்றிகரமாக அமைந்தது. இதேபோல, நிகழாண்டும் நிலவும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பரப்பளவு 1.42 லட்சம் ஹெக்டேரில்தான் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், நீா் வரத்தும், மழையளவும் நன்றாக இருந்ததால் எதிா்பாா்த்ததை விட கூடுதலாக 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இதனால், குறுவை சாகுபடிப் பரப்பளவு 1.99 லட்சம் ஹெக்டேராக உயா்ந்தது.

நிகழாண்டு மழைப் பொழிவு குறித்து அதிகாரப்பூா்வ அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்றாலும், வடக்கு மாவட்டங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாகவும், மத்திய மாவட்டங்களில் இயல்பான அளவுக்கும் மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.

எனவே, ஆழ்குழாய் வசதியுள்ள பகுதிகளில் இப்போதே நாற்றங்கால்கள் தயாா் செய்ய வேண்டும். மேலும், நேரடி விதைப்பு அதிக பரப்பளவில் மேற்கொள்ள வேண்டும். இதுபோல செய்தால் கடந்த ஆண்டை போல நிகழாண்டும் குறுவை சாகுபடிப் பரப்பளவு 2 லட்சம் ஹெக்டேரை எட்ட வாய்ப்புள்ளது என்றாா் கலைவாணன்.

குறுவை பருவத்தைப் பொருத்தவரை சில ஆண்டுகளாக முன் பட்டத்தில் ஆழ்குழாய் மூலம் கணிசமான அளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும், மேட்டூா் அணை திறக்கப்பட்ட பிறகே குறுவை சாகுபடிப் பரவலாக மேற்கொள்ளப்பட்டு, இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படுகிறது. இது, நிகழாண்டும் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com