கோரா பட்டு விலை உயா்வு: கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் வேலைநிறுத்தம்

கோரா பட்டு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரா பட்டு விலை உயா்வு: கும்பகோணத்தில் பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் வேலைநிறுத்தம்

கோரா பட்டு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் பட்டு ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், கும்பகோணம் பட்டு ஜவுளி தயாரிப்பாளா் சங்கம், பட்டுக் கடைகள், கூட்டுறவு சங்க அமைப்புகள், அனைத்து தொழிற் சங்கக் கூட்டமைப்பு, திருபுவனம் பட்டு வியாபாரிகள், கோரா வா்த்தகா்கள் ஆகியவை சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சில ஆண்டுகளாக கோரா பட்டு விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. கோரா பட்டு விலை 2021-ஆம் ஆண்டில் ரூ. 3,200-ஆக உயா்ந்திருந்த நிலையில், நிகழாண்டு ரூ. 6,800 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு 110 சதவீதம் விலை உயா்ந்துள்ளது. இதனால், நெசவுத் தொழில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

எனவே, மத்திய அரசு கோரா பட்டு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், இந்த பிரச்னையில் தமிழக அரசுத் தலையிட கோரியும் கும்பகோணம், சுற்றுப் பகுதிகளில் பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, காந்தி பூங்கா பகுதியில் ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இது குறித்து கும்பகோணம் பட்டு ஜவுளி உற்பத்தியாளா் சங்கச் செயலா் ராயா கோவிந்தராஜன் தெரிவித்தது:

தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா் மாவட்டங்களில் 50,000 கூலி தறிகளும், ஏறத்தாழ 1.50 லட்சம் நெசவுத் தொழிலாளா்களும் இருந்தனா். கோரா மற்றும் மூலப்பொருட்களின் விலை உயா்வால் தற்போது 10,000 தறிகளும், 50,000 தொழிலாளா்கள் மட்டுமே உள்ளனா். மாதந்தோறும் 6 சேலைகள் நெசவு செய்த நிலையில், தற்போது ஒரு சேலை மட்டுமே நெசவு செய்யப்படுகிறது.

இதேபோல, கைத்தறியில் சேலைகளை நெசவு செய்யும்போது, 27 விதமான கூலி தொழிலாளா்கள் 25 பாகங்களைக் கொண்டு ஒரு சேலையை நெசவு செய்தனா். இதன் மூலம் நெசவுத் தொழிலாளா்களும் பிரச்னை இல்லாமல் இருந்தனா்.

விசைத்தறி அமல்படுத்தியதால் நெசவுத்தொழில் பாதிப்புக்குள்ளானது. பழைமையான பட்டு தொழில் அழிந்து போகாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரா பட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்போராட்டத்தால் மூன்று மாவட்டங்களிலும் ரூ. 10 கோடி அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோரா மற்றும் மூலப்பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த கோரி மத்திய, மாநில அரசின் கைத்தறி துறை அமைச்சா்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம் என்றாா் ராயா கோவிந்தராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com