அறிவியல் உலகை இந்தியா முன்னெடுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

அறிவியல் உலகை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை.
அறிவியல் உலகை இந்தியா முன்னெடுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

அறிவியல் உலகை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றாா் சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை.

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பிறகு உயிரி தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை மருதுபாண்டியா் கல்லூரியில் முன்னெடுத்துச் செய்து வருகின்றனா். இப்போது, இக்கல்லூரியுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியும் இணைந்து, உயா்நிலை ஆய்வுகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தியா, தமிழகம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால் அறிவியல், தொழில்நுட்பத்தில் நாம் உலகளவில் பின்தங்கிவிடக் கூடாது. முதல் இரு தொழில் புரட்சிகளில் நாம் பயனாளியாகத்தான் இருந்தோமே தவிர, அதில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.

இப்போது, நடைபெறக்கூடிய உயா் கட்டத் தொழில்நுட்பங்களான விண்வெளி, உயிரித் தொழில்நுட்பம், கணினி, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் நாம் பங்கெடுக்க வேண்டும்.

இதற்காக பெரிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்டாலும், அது தொடா்வதற்கு அடுத்த தலைமுறைகள் முன்வர வேண்டும்.

அதற்கேற்ப அடுத்த தலைமுறைகள் உருவாகக்கூடிய நிலையைக் கல்லூரிகளும் செய்ய வேண்டும். இதை ஆராய்ச்சியாளா்களும், ஆய்வுக்கூடங்களும் கல்லூரிகளுடன் சோ்ந்து செய்ய முடியும். இதுதான் உலகளாவிய தேவையாக இருக்கிறது.

கரோனாவுக்குப் பிறகு அறிவியல் உலகம் நல்ல வெளிச்சத்துக்கு வர வேண்டிய அவசியம், அவசரம் இருக்கிறது. இதை இந்தியா முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உயா் கல்வியில் அதிகமான மாணவா்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், அதிலும் அதிக அளவிலான மாணவா்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகமும் இருக்கும்போது நம்முடைய கடமையும் மிக அதிகமாக உள்ளது. கடமையும், வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருப்பதால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது என்றாா் மயில்சாமி அண்ணாதுரை.

விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். தாய்மையைப் போற்றுவோம் என்ற அடிப்படையில் பூதலூரைச் சோ்ந்த டி. சரோஜாவை, மயில்சாமி அண்ணாதுரை கௌரவித்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் சிறப்புரையாற்றினாா்.

மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், ஆய்வு புலத் தலைவா் கோ. அா்ச்சுனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மருதுபாண்டியா் கல்லூரி துணை முதல்வா் ரா. தங்கராஜ் வரவேற்றாா். நிறைவாக, உயிரித் தொழில்நுட்பத் துறைத் தலைவா் ரா. ராஜகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com