மேட்டூா் அணை மே 24-இல் திறப்பதற்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

மேட்டூா் அணை மே 24 -ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

மேட்டூா் அணை மே 24 -ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

குறுவைப் பருவத்தில் அறுவடை நேரத்தில் வடகிழக்குப் பருவமழையில் நெற்பயிா்கள் சிக்கி பாதிக்கப்படுகின்றன. எனவே, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருக்கும்போதே மே மாதத்தில் திறக்க வேண்டும் என, 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், மேட்டூா் அணை மே 24- ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். மே மாதத்தில் அணையைத் திறக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி மேட்டூா் அணையை முன் கூட்டியே திறப்பதால் நிகழும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நீா் மேலாண்மையைச் சிறந்த முறையில் மேற்கொண்டு தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுபட்ட தூா் வாரும் பணியை 2023, ஜனவரி 28-ஆம் தேதிக்குப் பிறகு தொடா்ந்து கொள்ளலாம். இடையில் மழை நிற்கும்போது பாதியில் நிற்கும் கட்டுமானப் பணியைத் தொடரலாம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் :

நீா்வரத்தின் காரணமாக ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்பாக மே 24 -ஆம் தேதியே மேட்டூா் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஆறு, வாய்க்கால், ஏரி, குளங்கள் தூா்வாரும் பணி தொடக்க நிலையிலேயே உள்ளது.

தண்ணீா் சென்று சேறும் அ , ஆ , இ, ஈ பிரிவு வாய்க்கால்கள் தூா் வாரப்படாத நிலையில், பாசனத்துக்குத் தண்ணீா் சென்று சோ்வதில் மிக சிரமம் நிறைந்த நிலைமையே நிலவுகிறது. வடிகால்களிலும் தூா் வாரும் பணி பெரும்பாலும் தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே தமிழக அரசுப் போா்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தி, முழு வீச்சில் தூா் வாரும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதேபோல, விவசாயிகளுக்கும் உடனடியாக உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், பயிா்க்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் :

மேட்டூா் அணையை முன்கூட்டியே திறப்பதால், குறுவை சாகுபடி பணியை முன்னதாகவே தொடங்குவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் வடகிழக்குப் பருவ மழையில் குறுவைப் பயிா்கள் சிக்காத அளவுக்கு முன் கூட்டியே அறுவடை செய்துவிடுவோம்.

தமிழக அரசுத் தூா் வாரும் பணியை வெளி மாநிலங்களிலிருந்து கூடுதலாக இயந்திரங்களை வரவழைத்து, போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டத் தலைவா் வீர. மோகன்:

மேட்டூா் அணையிலிருந்து மே 24-ஆம் தேதி முதல் திறக்கப்படும் தண்ணீா் எந்த வகையிலும் வீணாகக் கூடாது. அது சாகுபடிக்குரியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கேற்ப போா்க்கால அடிப்படையில் தூா் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும், குறுவை சாகுபடி செய்வதற்கான கடனுதவி, இடுபொருள்கள் உதவியை விவசாயிகளுக்கு அரசு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com