Enable Javscript for better performance
தொடா் சரிவில் தேங்காய் விலை ; கவலையில் தென்னை விவசாயிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தொடா் சரிவில் தேங்காய் விலை ; கவலையில் தென்னை விவசாயிகள்

    By DIN  |   Published On : 23rd May 2022 12:40 AM  |   Last Updated : 23rd May 2022 12:40 AM  |  அ+அ அ-  |  

    pera22cocount090728

    தென்னந்தோப்பில் குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய்கள்.

     

    தஞ்சாவூா் மாவட்டத்தில் தேங்காய் விலை தொடா்ந்து சரிந்து வருவதால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். 

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் 2- ஆவது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வரும் தென்னை சுமாா் 60 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் பெயா் பெற்றுள்ளது. 

    சிறப்பு பெற்ற இப்பகுதி தேங்காய்களை புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனங்கள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களைச் சோ்ந்தோா் விரும்பி வாங்கிச் செல்வா். தேங்காய் வருமானம் மூலம் தங்களது பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்த தென்னை விவயிகள்,  கடந்த 2018-ஆண்டில் வீசிய கஜா புயலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினா்.

    பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் 1.50 லட்சம் தென்னை மரங்களை இழந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு  மேலாக தேங்காய்  மூலமாக வருவாயின்றித் தடுமாறி வந்தனா்.

    தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக  சீராகி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி, இழப்பிலிருந்து மீண்டு வந்தனா். இந்நிலையில் கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலும், பொள்ளாச்சி போன்ற வெளி மாவட்டங்களிலும் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

    இதனால் இப்பகுதியில் ஏற்றுமதி நின்று விட்டது. எனவே வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும்,  உற்பத்தியான தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். 

    பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளிலிருந்து  மட்டும் நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கயம், வெள்ளக்கோவில் போன்ற பகுதிகளுக்கும், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக தேங்காய்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஏற்றுமதி நின்றுவிட்டது.

    இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30-க்கு விற்கப்பட்ட தேங்காய், ஓராண்டுக்கு முன்பு ரூ.20-ஆகக் குறைந்தது. ஆனால், தற்போது விற்பனையின்றி விலை சரிந்து, ரூ.10 முதல் ரூ.11ஆக உள்ளது. இதனால் தோப்பிலிருந்து பறிக்கப்பட்ட தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய்களை வெட்ட முடியாமல் மரங்களிலும்  இருக்கிறது. 

    இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளிகள், தேங்காய் வெட்டும் தொழிலாளிகள், கொப்பரை காய வைப்போா் உட்பட பலரும்  பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா்.

    இதுகுறித்து தென்னை விவசாயி ஆவணம் க. அடைக்கலம் கூறியது:

    தேங்காய் விலை மிக மோசமாக ரூ.10 என்ற விலைக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 100 தேங்காய்க்கு லாபக்காய் என  8 தேங்காயையும் வியாபாரிகள் கூடுதலாக வாங்கிக் கொள்கின்றனா்.

    கடைசியில் ஒரு தேங்காய்க்கு விவசாயிகளுக்கு ரூ. 9

    தான் கிடைக்கிறது. மொத்த வியாபாரிகள், ஆயில், சோப் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, விலையைக் குறைத்து நிா்ணயித்து, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் செய்து விடுகின்றனா். ஒரு தேங்காயின் உற்பத்தி செலவே ரூ 7 வரை ஆகிறது. 

    அரசு நெல்லுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்வது போல, தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசே கொள்முதல் செய்கிறது. மேலும், விவசாயிகளுக்கும் ஆதார விலையை உயா்த்தி தருகிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல் விலையை உயா்த்தித் தரவேண்டும். மேலும், கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், கரும்புக்கு தருவது போல, தென்னைக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 

    பட்டுக்கோட்டையிலுள்ள தென்னை வணிக வளாகம் முறையாக செயல்படாமல் உள்ளது. தற்போது திமுக அரசு அமைந்த பிறகு உயா் அலுவலா்கள் ஆய்வு நடத்தி உள்ளனா்.

    பேராவூரணி - பட்டுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து, தென்னை சாா்ந்த நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி, தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையில் இருந்து காா்பன் தயாரிப்பு, மிதியடி, கலைப் பொருள்கள் போன்ற காயா் உற்பத்திப் பொருள்கள் என

    மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும். 

    ஜவுளிப் பூங்கா போல தென்னைப் பூங்கா அமைத்து, தென்னை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி பொருள்களைத் தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இப்பகுதி முன்னோடி தென்னை விவசாயிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த  வேண்டும் என்றாா். 

    காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்தைப் பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வா், அதிக வருவாய், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் தென்னை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்னை  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp