பயிா் காப்பீடு வழங்கியதில் பாரபட்சம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கியதில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் எழுப்பப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பயிா் காப்பீடு பாரபட்சம் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் முறையிட்ட விவசாயிகள்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பயிா் காப்பீடு பாரபட்சம் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் முறையிட்ட விவசாயிகள்.

பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கியதில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் எழுப்பப்பட்டது.

ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த சம்பா பருவ பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டதில், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு பாரபட்சமாக காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டது. மாவட்டத்தில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே கிடைத்தது. இந்த முரண்பாடு குறித்து காப்பீட்டு நிறுவனமும், புள்ளியியல் துறையினரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா் விளக்கம் அளிக்கத் தொடங்கினாா். ஆனால், விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க இயலவில்லை. இதையடுத்து, விவசாயிகளை ஆட்சியா் சமாதானப்படுத்தினாா்.

பின்னா், புள்ளியியல் துறை அலுவலா் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பயிா் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், ஐந்து ஆண்டு கால சராசரி மகசூல் கணக்கிடுவதற்கும், எங்களுக்கும் தொடா்பு இல்லை எனவும், அப்பணியைக் காப்பீட்டு நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் விளக்கம் அளித்தாா்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் அறுவடை சோதனை ஒளிவுமறைவாக நடத்தப்படுகிறது. எனவே, இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாவட்ட அலுவலகம் கிடையாது. எங்கிருந்தோ கணக்கீடு செய்வதால்தான் இப்பிரச்னை ஏற்படுகிறது.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: விவசாயிகள் செலுத்திய பிரீமிய தொகை கூட இந்த மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏக்கருக்கு ரூ. 5,000 வழங்க தமிழக முதல்வா் முன்வர வேண்டும்.

மதுக்கூா் ஏ.பி. சந்திரன்: பயிா் காப்பீடு இழப்பீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: தமிழக முதல்வா் பாா்வையிட்ட மதுக்கூா் வட்டாரத்தில் ஒருவருக்குக் கூட பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பிரீமிய தொகையைச் செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைமை உள்ளது.

அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: 2017 - 18 ஆம் ஆண்டில் பயிா் சேதம் 62 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டு, அறிவிக்கப்பட்ட ரூ. 16,000 இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை.

நாமம் இட்டு வந்த விவசாயிகள்: இதனிடையே, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டியக்க மாநில துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் 5 விவசாயிகள் நெற்றில் நாமம் இட்டு வந்து, பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com