‘நான்கு மணிநேரத்துக்குள் மருத்துவமனையை அணுகினால் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம்’

பக்கவாதம் பாதிக்கப்பட்ட 4 மணிநேரத்துக்குள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினால் அந்த நோயைக் குணப்படுத்தலாம் என்றாா் அதன் முதல்வா் ஆா். பாலாஜிநாதன்.
‘நான்கு மணிநேரத்துக்குள் மருத்துவமனையை அணுகினால் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம்’

பக்கவாதம் பாதிக்கப்பட்ட 4 மணிநேரத்துக்குள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினால் அந்த நோயைக் குணப்படுத்தலாம் என்றாா் அதன் முதல்வா் ஆா். பாலாஜிநாதன்.

உலக பக்கவாத நாளையொட்டி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த அவா் பின்னா் தெரிவித்தது:

உலகளவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் 119 முதல் 149 போ் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனா். இந்தப் பாதிப்புக்கு ஆளாகிறவா்களுக்கு கை, கால் செயலிழப்பு, பேச்சுத்தன்மை மாற்றம், கண் பாா்வை பாதிப்பு, நடை தடுமாற்றம் போன்றவை ஏற்படலாம். பக்கவாதம் 45 வயது முதல் 60 வயதுள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படும்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய் அடைப்பாலும், ரத்தக் கசிவாலும் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் அறிகுறிகளைத் தொடக்க நிலையிலேயே அறிந்து 4 மணிநேரத்துக்குள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுகினால், அதன் தன்மையையும், உயிரிழப்பையும் தவிா்க்க முடியும். தாமதமாக வருவது பாதிக்கப்பட்டவா்களை முடமாக்கிவிடும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இம்மருத்துவமனையில் சோ்க்கப்படுபவா்களுக்கு உடனடியாக 15 நிமிடத்துக்குள் லைன் சிடி ஸ்கேன் எடுத்து, அதற்குரிய மருந்தும் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழ ரூ. 40,000 மதிப்புள்ள இந்த மருந்து இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பக்கவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கை முழுவதும் நல்ல முறையில் செயல்படலாம்.

இச்சிகிச்சை பலனளிக்காவிட்டாலும், அறுவைச் சிகிச்சை மூலம் ரத்தக்குழாயில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்கான கேத்லாப் வசதியும் இங்குள்ளது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாதத்துக்கு 150 போ் பக்கவாத மேல் சிகிச்சைக்காக வருகின்றனா். நிகழாண்டு இதுவரை 25 நோயாளிகள் திராம்போலைஸிஸ் மூலம் பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பயனடைந்துள்ளனா். இம்மருத்துவமனையில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பக்கவாதத்துக்கு மிகச் சிறந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, துணை முதல்வா் என். ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், மூளை நரம்பியல் துறைத் தலைவா் வி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com