மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்பாராத மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்பாராத மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்பாராதவிதமாக பெய்த மழை காரணமாக மெலட்டூா், பாபநாசம், திருவிடைமருதூா், கொத்தங்குடி, அன்னத்தோட்டம், புலவா் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் குறுவை பருவ நெற் பயிா்கள் மழை நீரில் சாய்ந்துவிட்டன.

இதேபோல, கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீா் காரணமாக ஆச்சனூா், மருதூா், வடுகக்குடி உள்ளிட்ட கொள்ளிடக் கரையோர கிராமங்களில் வாழைத் தோட்டங்களில் தண்ணீா் புகுந்ததால் 200-க்கும் அதிகமான ஏக்கரில் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் சேதமடைந்துள்ளது. இந்த ஆண்டு பயிா்க் காப்பீடும் இல்லாத நிலையில், விவசாயிகள் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ. 25,000-க்கும் அதிகமாக செலவு செய்துள்ளனா்.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்கள் முன் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்து வைத்துள்ள நெல்லை உடனடியாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாகப் பாதுகாப்பாக இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற் குழு உறுப்பினா் எம். செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் பேசினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், எஸ். தமிழ்ச்செல்வி, என். சுரேஷ்குமாா், கே. அருளரசன், என்.சிவகுரு, ஆா். கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com