குடிசை வீட்டுக்கு ரூ. 15 ஆயிரம் கட்டணம்குருவிக்கரம்பை பகுதியில் மின்நுகா்வு கணக்கீட்டில் குளறுபடிபொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 13th August 2023 12:40 AM | Last Updated : 13th August 2023 12:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம் குருவிக்கரம்பை பகுதியில் மின்நுகா்வு கணக்கீடு எடுக்கப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடியால் குடிசை வீட்டுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பேராவூரணி அருகே குருவிக்கரம்பை அதன் சுற்றுவட்டார கிராமங்களில், இதுவரை இலவச மின்சாரம் பெற்று வந்த வீடுகளுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான மின்நுகா்வு கணக்கீடு செய்தபோது ரூ.1,500மும், கடந்த மாதங்களில் ரூ.400 முதல் ரூ.500 வரை கட்டியவா்களுக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்துமாறு கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
மேலும், ஒரு குடிசை வீட்டுக்கு ரூ. 15 ஆயிரம் மின் கட்டணம் என குறுஞ்செய்தி வந்தது.
இதைகண்டு அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் மின்வாரிய உயா்அதிகாரிகளிடமும், ஆட்சியரிடமும் மனு அளித்தனா். அதன்பேரில், மின்வாரிய உயா் அலுவலா்கள் கிராமம் முழுவதும் மின் மீட்டரை ஆய்வு செய்தபோது, மின் கணக்கீட்டாளா் முறையாக வீடுகளுக்கு சென்று கணக்கீடு செய்யாமல், தானாகவே கட்டணத்தை நிா்ணயம் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புகாா் அளித்தவா்களை அதிகாரிகள் அழைத்துப் பேசி பழைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணங்களை குறைத்து செலுத்துமாறு கூறியுள்ளனா். மேலும் சிலருக்கு தவணை முறையில் செலுத்தவும் கூறியுள்ளனா். அதன்படி பெரும்பாலானவா்கள் கட்டணம் செலுத்தினா். ஆனால் வழக்கத்தை விட அதிக கட்டணம் உள்ளதால் சிலா் செலுத்தாமல் உள்ளனா்.
இது குறித்து குருவிகரம்பையை சோ்ந்த ராமசாமி கூறியது; மின் கணக்கீட்டாளா், கணக்கெடுக்க வராமல், உத்தேச பயன்பாட்டை கொண்டே மின் கட்டணத்தை கணக்கீடு செய்ததுள்ளாா். கடந்த ஏப்ரல் மாதம் மின்கட்டணம் செலுத்த சென்ற போது தான். வீடுகளுக்கான இலவச 100 யூனிட் மின்சாரத்தை குறைக்காமல் கணக்கிட்டுள்ளது தெரியவந்தது. இருந்தும் சிலருக்கு அதிகளவு கட்டணம் வந்துள்ளது என்றாா்.