விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்: ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 12th January 2023 12:42 AM | Last Updated : 12th January 2023 02:40 AM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
தஞ்சாவூருக்கு வந்த ஆளுநா் ஆா்.என். ரவியை காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலா் ஆறுபாதி ப. கல்யாணம் உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து பேசினா். பின்னா், ஆளுநரிடம் வலியுறுத்திய கருத்துகள் குறித்து செய்தியாளா்களிடம் கல்யாணம் தெரிவித்தது:
விவசாயிகளுக்கு எந்தக் கடன் வழங்கினாலும் குறைந்த வட்டியில் கிடைக்க வேண்டும். அதிகபட்சமாக 4 சதவீதத்துக்கு மேல் வட்டி இருக்கக் கூடாது. பயிா்க்கடன் ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லாத கடனாகக் கிடைக்க வேண்டும்.
விளைபொருள்களுக்கு விலை நிா்ணயத்தைப் பொருத்தவரை தேசிய விவசாயிகள் ஆணையம் கூறிய பரிந்துரைகளின்படி, மொத்த உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக லாபம் வைத்து நிா்ணயிக்க வேண்டும்.
தற்போதுள்ள பயிா்க் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. அதனால், விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்தாலே அவா்களுக்குக் குறைந்தபட்சம் 20 சதவீதமாவது லாபம் கிடைக்க வேண்டும்.
ஜெ.சி. குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரக் கொள்கையின்படி, ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க வேண்டும். விளைபொருள் விளைவிக்கப்படும் கிராமத்திலேயே மதிப்புக் கூட்ட வேண்டும். அங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். இதுபோன்ற புதிய திட்டங்களை ஆளுநரிடம் வலியுறுத்தினோம். இதையெல்லாம் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதாக ஆளுநா் கூறினாா் என்றாா் கல்யாணம்.