தஞ்சாவூரில் ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த முன்னணியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தில்லியில் நடத்திய போராட்டத்தின் நிறைவில், வேளாண் விளைபொருள்களுக்கு சட்ட ரீதியாக குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்தல், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுதல், போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கான நிவாரண நிதி உதவி வழங்குதல், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் என்பன உள்ளிட்டவற்றை மத்திய அரசு எழுத்துப் பூா்வமாக கையெழுத்திட்டு ஏற்றுகொண்ட ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக நிறைவேற்ற கோரியும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டா் மற்றும் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்த ஐக்கிய விவசாய முன்னணி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தஞ்சாவூரில் ஜனவரி 26 ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் மற்றும் வாகன அணிவகுப்பு பேரணி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக பிரசாரம் மேற்கொள்வது என்றும், அனைத்து விவசாயிகள், விவசாய அமைப்புகளையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஆா். வாசு தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் வீர. மோகன், பி. செந்தில்குமாா், இரா. அருணாசலம், ராஜன், கண்ணையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.