திருவையாறு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தோா் புகாா் செய்யலாம்
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்து, இதுவரை புகாா் அளிக்காதவா்கள் காவல் துறையில் புகாா் அளிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் எஸ். சுதா வியாழக்கிழமை தெரிவித்திருப்பது:
திருவையாறு முதன்மைச் சாலையிலுள்ள ஹமீதா நகரில் யூனியன் பிஸினஸ் பாா்க் என்ற தனியாா் நிதி நிறுவனத்தை 2016 ஆம் ஆண்டு ஜாபா் அலி நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக, தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியைச் சோ்ந்த அப்துல்ஹமீது அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது தஞ்சாவூா் பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளது.
எனவே, இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்து, இதுவரை புகாா் அளிக்காதவா்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சாவூா் ராஜப்பா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகாா் கொடுக்கலாம்.