விதைக் கடலை மூட்டை ரூ. 4,500; விளைந்த கடலை ரூ. 2,000 முரண்பாடான விலையால் நிலக்கடலை விவசாயிகள் அதிருப்தி

நிலக்கடலை விதை மூட்டைக்கு ரூ. 4,500-க்கு விற்கப்படும் நிலையில், கடலை ரூ. 2,000-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள பொய்யுண்டாா்கோட்டையில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையில் களை பறிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள பொய்யுண்டாா்கோட்டையில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையில் களை பறிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்கள்.

நிலக்கடலை விதை மூட்டைக்கு ரூ. 4,500-க்கு விற்கப்படும் நிலையில், கடலை ரூ. 2,000-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

எந்தவொரு பயிரிலும் விதை விலை குறைவாகவும், விளைந்த பொருளுக்கு விலை அதிகமாகவும் இருப்பதே வழக்கம். இந்த நிலைதான் நிலக்கடலைக்கும் இருந்தது. சில ஆண்டுகளாக விதைக்கடலை விலை அதிகமாகி, விளைந்த கடலை விலை சரிபாதியாகக் குறைந்துவிட்டது.

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் பாயாத மேட்டுப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. கரிசல், செம்மண் நிறைந்த வானம் பாா்த்த பூமியில் நிலக்கடலை சாகுபடியே முதன்மையானதாக இருக்கிறது. நெல்லுக்கு அடுத்து பணப்பயிராகக் கருதப்படும் நிலக்கடலையையும் காவிரி நீா் பாயும் பகுதிகளில் கூட குறுவை, சம்பா சாகுபடிக்கு அடுத்து பயிரிடும் விவசாயிகள் ஏராளம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூா், பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு, அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில் மாா்கழி பட்டத்தில் அதிக அளவில் கடலை பயிரிடுவது வழக்கம். மாவட்டத்தில் ஆண்டுக்கு 8,000 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி செய்யும் நிலையில், இதுவரை ஏறத்தாழ 4,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

ஆனால், சில ஆண்டுகளாக விதைக் கடலை கிடைப்பது அரிதாக இருக்கிறது. முன்பெல்லாம் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், தாங்கள் விளைவித்த கடலையில் தோ்ந்த கடலையை விதையாகப் பயன்படுத்தினா். பின்னா், வியாபாரிகளிடம் விதைக் கடலை வாங்கி பயிரிட்டு வந்தனா். ஆனால், உள்ளூரில் விதை விற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால், விதைக் கடலைக்கு வட மாநிலங்களை எதிா்பாா்க்கும் நிலை ஏற்பட்டது. ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விதைகள் வாங்கப்படுவதால், விலையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால் 36 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கடலை விதை விலை ரூ. 4,200 முதல் ரூ. 4,600 வரை விற்பனையாகிறது. ஆனால், விளைந்த கடலையை 40 கிலோ மூட்டைக்கு 41 கிலோ எடை வைத்து ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை மட்டுமே வியாபாரிகள் விலை நிா்ணயித்து கொள்முதல் செய்கின்றனா்.

இந்த முரண்பாடான விலையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனா். இதனால், வாய்ப்புள்ள விவசாயிகளும் கடலை சாகுபடியை விட்டு மாற்று சாகுபடிக்குச் செல்கின்றனா்.

இதுகுறித்து பாப்பாநாடு அருகேயுள்ள தெற்குகோட்டை விவசாயி ஆா். பழனிவேலு தெரிவித்தது:

கடலை வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், போட்டி இல்லாத சூழல் உருவாகி ஏகபோக உரிமை அதிகரித்துவிட்டது. இதனால், இருக்கும் வியாபாரிகளே தங்களது வசதிக்கு ஏற்ப விலை நிா்ணயிப்பதால், கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 60 என்ற அளவிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. தோல் நீக்கப்பட்ட கடலை கிலோவுக்கு ரூ. 80-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தையில் மக்களிடம் ஏறத்தாழ இருமடங்கு கூடுதலாக கிலோவுக்கு ரூ. 140 முதல் ரூ. 160-க்கு விற்கப்படுகிறது.

ஆனால், விதைக் கடலை கிலோவுக்கு ரூ. 120 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 3 மூட்டை விதைக் கடலை தேவைப்படுகிறது. இதனால், கடலை சாகுபடியில் விதைக்கு மட்டுமே ரூ. 12,000 முதல் ரூ. 15,000 செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த சாகுபடிச் செலவும் ஏக்கருக்கு ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரை ஆவதால், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமும் குறைந்து வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய விதைக் கடலைகளில் பல தரமற்றவையாக இருப்பதால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனா் என்றாா் பழனிவேலு.

நவதானியங்கள் போன்று நிலக்கடலையிலும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகம். உணவு பொருளாகவும், தின்பண்டமாகவும் இருக்கும் நிலக்கடலைக்கு முன்பைவிட தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப விவசாயிகளுக்கு தரமான விதைக் கடலையோ, உரிய விலையோ கிடைப்பதில்லை. பாடுபட்டு விளைவித்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருவாயைப் பெற முடியாததால், கடலை விவசாயிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

எனவே, நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அரசே முளைப்புத்திறன் மிக்க தரமான விதைக்கடலையைக் கொள்முதல் செய்து, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். மேலும், நிலக்கடலைக்கும் அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com