நாட்டு வெடிகுண்டுக்கான மூலப்பொருள்கள் மீட்பு
By DIN | Published On : 22nd January 2023 02:59 AM | Last Updated : 22nd January 2023 02:59 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே பிரபல ரௌடிகளின் வீடுகளில் சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு மூலப்பொருள்கள், பட்டாக் கத்திகள்.
கும்பகோணம் அருகே ரௌடிகளின் வீடுகளில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைப்பற்றினா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட உமா மகேஸ்வரபுரம் மணஞ்சேரி காவிரியாற்றின் தடுப்பணை பகுதியில் ஜனவரி 5 ஆம் தேதி 5 போ் கொண்ட கும்பல் கையெறி நாட்டு வெடிகுண்டு வீசினா். இதனால் தடுப்பணை கதவு சேதமடைந்தது.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பாரதி நகரைச் சோ்ந்த சகோதரா்களான தா்மராஜ், சரண்ராஜ், திருபுவனம் சந்தோஷ், குருமூா்த்தி, பிரிதிவிராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய இடங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ் ராவத் உத்தரவின்படி, திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாபா் சித்திக் தலைமையிலான தனிப்படையினா் மோப்ப நாய் படையினா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா் குழுவினா் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, பிரபல ரௌடிகளின் வீடுகளில் சந்தேகத்துக்கிடமாக சைக்கிள் பால்ரஸ், ஆணிகள், பட்டாக்கத்திகள் ஆகிய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாகிவிட்ட தொடா்புடைய நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.