பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ. 15.84 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூரில் மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் பறக்கும் படையினரால் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 15.84 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை கனரக வாகனங்களைப் பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.

இதில், தோ்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ. 81 ஆயிரத்து 875, ரூ. 62 ஆயிரம், ரூ. 6 லட்சத்து 39 ஆயிரத்து 640, ரூ. 64 ஆயிரத்து 680, ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 525, ரூ. 60 ஆயிரத்து 406, ரூ. 1.10 லட்சம், ரூ. 93 ஆயிரத்து 967, ரூ. 84 ஆயிரத்து 290, ரூ. 1.50 லட்சம் என மொத்தம் ரூ. 15 லட்சத்து 84 ஆயிரத்து 383 ஐ பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படி, தோ்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மாவட்ட அளவில் நாள்தோறும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com