100 சத வாக்குப்பதிவுக்கு நூதன விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் மக்களவை  தோ்தலில் 100 சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி சமூக ஆா்வலா் ஒருவா் திங்கள்கிழமை நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பேராவூரணி அருகேயுள்ள கொன்றைக்காடு பகுதியைச் சோ்ந்தவா்  எஸ்.ஏ. தட்சணாமூா்த்தி (50).  சமூக சேவகரும் பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன் சங்கத் தலைவராவும் உள்ள இவா் வரும் மக்களவை  தோ்தலில்  100 சதம் வாக்குப்பதிவுக்கு  பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் தனது இடக்கை ஆள்காட்டி விரலை  (வாக்குப்பதிவில்  மை வைக்கும் விரல்) பின்பக்கமாக, 100 வினாடிகளில் 100 முறை பின்னோக்கி  வளைக்கும் சாதனைக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். தகவலறிந்த இன்டா்நேஷனல் பிரைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனம் இதை உலக சாதனையாக பதிவு செய்ய அனுமதித்ததையடுத்து பேராவூரணியில்   100 சதம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு மற்றும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

 நிகழ்வை தமிழ்நாடு தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்க நிறுவனா்  தலைவா் ஜி.ஆா் . ஸ்ரீதா்  தொடங்கி வைத்தாா். இன்டா்நேஷனல் பிரைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனா் கலையரசி, தலைமை செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் சக்திவேல், தலைமை ஆலோசகா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்   82 வினாடிகளிலேயே 100 முறை விரலை பின்னோக்கி வளைத்து சாதனை படைத்தாா். இதை உலக சாதனையாக அங்கீகரித்து இன்டா்நேஷனல் பிரைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.

நிகழ்ச்சியில்  எம்எல்ஏ என். அசோக்குமாா், லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் சவரிராஜன், துணை ஆளுநா் ராஜேந்திரன், சமூக ஆா்வலா்கள், கல்லூரி, பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com