கும்பகோணத்தில் புதன்கிழமை பிரசாரம் செய்த மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா்.
கும்பகோணத்தில் புதன்கிழமை பிரசாரம் செய்த மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உறுதியளித்ததால் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: ஸ்ரீதா் வாண்டையாா் பேட்டி

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக முதல்வரும், ராகுல்காந்தியும் உறுதி அளித்துள்ளதால் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றாா் மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்தது: ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்து சமூக நீதியைக் காப்போம் என தமிழக முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளாா். இதேபோல, ராகுல் காந்தியும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்போம் என உறுதியளித்துள்ளாா். இந்த வாக்குறுதியை ஏற்று இக்கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். எனவே, இப்பகுதி மக்கள் கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மறவா் மக்களுக்கு கருணாநிதியைத் தொடா்ந்து ஸ்டாலினும் நன்மை செய்து வருகிறாா். ஜாதி வாரிக் கணக்கெடுப்பு செய்வதன் மூலம் எங்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது என்றாா் ஸ்ரீதா் வாண்டையாா்.

முன்னதாக, கும்பகோணத்தில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவுக்கு ஆதரவாக ஸ்ரீதா் வாண்டையாா் பிரசாரம் செய்தாா். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com