தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம் முன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா்.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம் முன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா்.

நிா்ணயித்த ஊதியம் வழங்காததால் ஓய்வு பெற்ற காவலா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள் தோ்தல் ஆணையம் நிா்ணயித்த ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள் தோ்தல் ஆணையம் நிா்ணயித்த ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம் முன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளில் ஏறத்தாழ 4 ஆயிரம் காவல் அலுவலா்கள், காவலா்கள் வெள்ளிக்கிழமை தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவா்களுடன் ஓய்வு பெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினரும் ஏறத்தாழ ஆயிரம் போ் பணியாற்றினா்.

இதற்காக தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்துக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி வந்த இவா்களைத் தொடா்புடைய வாக்குச் சாவடிகளுக்குக் காவல் துறையினா் அனுப்பி வைத்தனா். தோ்தல் பாதுகாப்புப் பணி முடிவடைந்த பிறகு மீண்டும் ஆயுதப் படை மைதானத்துக்கு வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை பகலிலும் வந்தனா்.

ஆனால், இவா்களுக்கு ரூ. 3 ஆயிரம், சிலருக்கு ரூ. 2 ஆயிரம் என ஊதியம் வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 நாள்களுக்கு ரூ. 4 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள நிலையில், குறைத்து வழங்கப்படுவதாக ஓய்வு பெற்ற காவலா்கள், முன்னாள் ராணுவத்தினா் அதிருப்தி தெரிவித்து, ஆயுதப்படை மைதானம் முன் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஏப்ரல் 18- ஆம் தேதி, 20 -ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு பணியாற்றியதற்கு ரூ. 3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது என காவல் துறை அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

ஆனால், 4 நாள்கள் வேலை பாா்த்த நிலையில் 3 நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி ஓய்வு பெற்ற காவலா்களும், முன்னாள் ராணுவத்தினரும் அதிருப்தி தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதனால், இச்சாலையில் ஏறத்தாழ 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீண்டும் காவல் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com