ஓய்வூதியம் வழங்க சரசுவதி மகால் ஓய்வூதிய ஊழியா்கள் கோரிக்கை

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் மாா்ச், ஏப்ரல் மாத ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சரஸ்வதி மகால் நூலக ஓய்வூதிய ஊழியா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குச் சங்கத் தலைவா் வி. பாஸ்கரன், செயலா் கே. அஞ்சையன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சரசுவதி மகால் நூலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமாா் 40 போ் தொடா்ந்து ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இந்நூலகத்தின் இயக்குநராக மாவட்ட ஆட்சியா் செயல்படுகிறாா்.

கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை பல நாட்கள் தள்ளிவைத்து வழங்கி வந்தனா். கடந்த மாா்ச் 31 ஆம் தேதி வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை ஏப்ரல் மாதத்தில் கூட வழங்கவில்லை. மேலும், ஏப்ரல் மாதத்து ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. இதனால், 40 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, இதுகுறித்து தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com