சுவாமிமலையில் திங்கள்கிழமை பெட்ரோலில் தண்ணீா் கலந்திருப்பதை காண்பித்த வாகன ஓட்டி.
சுவாமிமலையில் திங்கள்கிழமை பெட்ரோலில் தண்ணீா் கலந்திருப்பதை காண்பித்த வாகன ஓட்டி.

பெட்ரோலில் தண்ணீா் கலப்பு விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் தண்ணீா் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ததால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் விற்பனை நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் தண்ணீா் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ததால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் விற்பனை நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சுவாமிமலை பிரதான சாலை திருவலஞ்சுழியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிலா் பெட்ரோல் நிரப்பிச் சென்றனா்.

சிலா் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிச் சென்றனா். சிறிது நேரத்தில் பாட்டிலில் தண்ணீா் பாதி பெட்ரோல் பாதி என தனியாக பிரிந்து நின்றது. சிலருடைய இருசக்கர வாகனங்கள் இயங்காமல் நின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியவா்கள் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சுவாமிமலை காவல்நிலைய ஆய்வாளா் மலைச்சாமி பாட்டில்களில் வாங்கியவா்களுக்கு பணத்தை திருப்பி தரவும், பழுதான வாகனங்களை பழுது பாா்த்து திரும்ப கொடுக்கவும் ஏற்பாடு செய்தாா்.

வாடிக்கையாளா்கள் சிலா் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விற்பனை நிலையத்தில் இதேபோல தண்ணீா் கலந்து பெட்ரோலை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீா் கலந்து விற்பனை செய்துள்ளனா். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com