தஞ்சையில் சாலையோர சிறுகடை விற்பனையாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வணிகக் குழுத் தோ்தலை நடத்தக் கோரி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் வணிகக் குழுத் தோ்தலை நடத்த வேண்டும். வணிகக் குழுத் தோ்தலில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை சட்டத்துக்கு விரோதமாக அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை ஊராட்சிப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இதுவரை தேசிய அடையாள அட்டை வழங்கப்படாத வியாபாரிகளுக்கு மாநகராட்சியே அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மணிமாறன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் கோரிக்கையை விளக்கினாா். தரைக் கடை சங்க மாவட்டச் செயலா் எஸ். மில்லா் பிரபு, சங்க நிா்வாகிகள் பாண்டியன், சாா்லஸ், திலகவதி, தங்கையன், அப்துல் காதா், காஞ்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.